கடந்த 2023ல் ஆர்யா ஹீரோவாக நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படம் திரைக்கு வந்தது. அதற்கு பிறகு வெங்கடேஷ் நடித்த ‘சைந்தவ்’ என்ற தெலுங்கு படத்திலும், இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயகுமார் ஹீரோவாக நடித்த ‘தி பாய்ஸ்’ என்ற தமிழ் படத்திலும், சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்த ‘திரு.மாணிக்கம்’ என்ற படத்திலும், விஷால் ஹீரோவாக நடித்த ‘மதகஜராஜா’ என்ற படத்திலும் கவுரவ வேடத்தில் நடித்திருந்த ஆர்யா, சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற தமிழ் படமும், ‘அனந்தன் காடு’ என்ற தமிழ் மற்றும் மலையாள படமும் உருவாகி வருகிறது.
நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்காக வில்லன், கவுரவ வேடம் என்று இமேஜ் பார்க்காமல், சம்பளத்தை எதிர்பார்க்காமல் நடித்து நல்ல பெயர் வாங்கியிருக்கும் ஆர்யா, ‘அனந்தன் காடு’ படத்தில் மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். வினோத் குமார் தயாரித்துள்ளார். ஜீயன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். ‘எம்புரான்’ முரளி கோபி கதை எழுதியுள்ளார். நடிகரும், இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி நடித்திருந்த ‘ரன் பேபி ரன்’ என்ற படத்தை இயக்கியவர் ஜீயன் கிருஷ்ணகுமார். ‘அனந்தன் காடு’ படத்தில் ஆர்யா, இந்திரன்ஸ், முரளி கோபி, ரெஜினா கெசண்ட்ரா, நிகிலா விமல் நடித்துள்ளனர். யுவா ஒளிப்பதிவு செய்ய, ‘காந்தாரா’ பி.அஜ்னீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார்.