அமிதாப் ஷூட்டிங்கில் அவமானப்பட்ட ஷோபனா

நடனத்திலும், நடிப்பிலும் தனித்துவம் பெற்ற ஷோபனா, அதிக படங்களை விட, தரமான கதை மற்றும் கேரக்டர் கொண்ட படத்தை மட்டுமே தேர்வு செய்து நடிப்பது வழக்கம். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துடரும்’ என்ற படத்தில் மோகன்லால் மனைவி வேடத்தில் நடித்திருந்த அவர், பாலிவுட்டில் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து பேசியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில், ‘இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த படத்தில், ஒரு பாடல் காட்சியில் வந்து செல்லும் சின்ன கேரக்டரில் நடித்தேன். அகமதாபாத்தில் ஷூட்டிங் நடந்தது. அந்த பாடல் காட்சியில் நான் நிறைய உடைகள் அணிந்து நடிக்க வேண்டியிருந்தது.

அன்று அமிதாப் பச்சனை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. படக்குழுவினரை அழைத்து, ‘எங்கே கேரவன்?’ என்று கேட்டேன். அப்போது ஒருவர், ‘ஷோபனா மலையாள படவுலகில் இருந்து வந்தவர் என்பதால், எந்தமாதிரி வசதி இருந்தாலும் அட்ஜெஸ்ட் செய்துகொள்வார். அந்த மரத்தின் பின்னால் நின்று உடையை மாற்றிக்கொள்ள சொல்லுங்கள்’ என்றார். இப்படி அவர் சொன்னதை அங்கிருந்த கேரவனில் அமர்ந்திருந்த அமிதாப் பச்சன் வாக்கிடாக்கி மூலம் கேட்டுவிட்டார். உடனே கோபத்துடன் கேரவனை விட்டு வெளியே வந்த அவர், ‘யார் அப்படி சொன்னது?’ என்று கர்ஜிக்க, மொத்த படக்குழுவும் நடுங்கியது.

பிறகு அவர் தனது கேரவனுக்கு சென்று என்னை உடை மாற்றிக்கொள்ள சொல்லிவிட்டு, அதுவரை அவர் வெளியே இருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டார். பிறகு ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் ஷூட்டிங்கில் அவருடன் இணைந்து நடித்தேன். அன்று இந்தி படப்பிடிப்பில் நான் பார்த்த அதே மனிதாபிமானத்தை இப்போதும் அமிதாப் பச்சனிடம் பார்த்து ஆச்சரியப்பட முடிந்தது’ என்றார்.

Related Stories: