சென்னை: விஜய் சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ என்ற படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய பிருத்விராஜ் ராமலிங்கம் கதையின் நாயகனாக நடித்து, கதை எழுதி, நியூ மாங்க் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம், ‘குட் டே’. மற்றும் காளி வெங்கட், ‘மைனா’ நந்தினி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், பகவதி பெருமாள், வேல.ராமமூர்த்தி, போஸ் வெங்கட் நடித்துள்ளனர். என்.அரவிந்தன் இயக்கியுள்ளார். பூர்ணா ஜெஸ் மைக்கேல் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசை. படம் குறித்து பிருத்விராஜ் ராமலிங்கம் கூறியதாவது: ஆடை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நான், மது போதையில் இருக்கும்போது, ஒரு இரவில் சந்திக்கும் பல்வேறு சம்பவங்களை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. இரவின் தொடக்கத்தில் சூழ்நிலை கைதியாக இருந்த ஒருவன், விடியற்காலையில் எப்படி மனிதனாக மாறுகிறான் என்பது திரைக்கதை. ஒரு மனிதன் தன்னைத்தானே உணர்வது மையக்கரு. இப்படத்தை இண்டர்கட் ஷாட்டே இல்லாமல் படமாக்கி இருப்பது புதுமை. என்னிடம் பேசுபவரின் குரல் ஒலிக்கும். என்னை காட்டிவிட்டு, பேசுபவரை இண்டர்கட் ஷாட்டில் காண்பிக்க மாட்டார்கள். ரசிகர்களுக்கு இது புதிய அனுபவமாக இருக்கும். யு/ஏ சான்றிதழ் பெற்ற இப்படம், வரும் 27ம் தேதி வெளியாகிறது.