ஐதராபாத்: ‘குபேரா’ படத்தை ஜூன் 20ம் தேதியே ரிலீஸ் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் ரூ.10 கோடியை திருப்பித் தர வேண்டும் என அமேசான் ப்ரைம் மிரட்டியதாக தயாரிப்பாளர் பகீர் புகார் கூறியுள்ளார். பல்வேறு ஓடிடி நிறுவனங்களை நம்பியே புதிய படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் வேறு வழியில்லாமல் அவர்கள் சொல்வதை கேட்டு ரிலீஸ் தேதியை முடிவு செய்கின்றனர். மேலும் இப்போது வரும் பெரும்பாலான படங்களுக்கு ஆங்கிலத்திலேயே தலைப்பு வைக்கவும் ஓடிடி நிறுவனங்கள் கட்டாயப்படுத்துகின்றன. தனுஷ் நடித்துள்ள ‘குபேரா’ படத்துக்கும் தற்போது அப்படியொரு சிக்கல் வந்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளரே வெளிப்படையாக கூறியுள்ள நிலையில், படம் முழுமையாக முடிவடைந்ததா? அல்லது கடைசி நேர அவசரம் சிக்கலை உண்டாக்குமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் உருவாகி உள்ள ‘குபேரா’ திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர். ஆனால், படத்தின் தயாரிப்பாளர் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் ஓடிடி நிறுவனத்தின் அழுத்தம் தான் இந்த அவசரத்துக்கு காரணம் என்றும் கூறியுள்ளார். ‘‘குபேரா படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்யவே திட்டமிட்டு இருந்தோம். ஜூலை மாதத்தில் ஒரு நல்ல நாளை கொடுங்க எனக் கேட்ட நிலையில், ஜூன் 20ம் தேதியை அவர்கள் முடிவு செய்துவிட்டனர்.
படம் தள்ளிப்போனால் நாங்கள் கொடுத்த தொகையில் ரூ.10 கோடியை திருப்பித் தர அமேசான் ப்ரைம் கேட்கிறது. ஓடிடி நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக இந்த மாதமே படத்தை வெளியிடும் முயற்சியில் உள்ளோம்’’ என ‘குபேரா’ படத்தின் தயாரிப்பாளர் சுனில் நரங் பகீர் கிளப்பியுள்ளார். ‘குபேரா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.