சென்னை: ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் அதர்வா, நிமிஷா சஜயன் நடிக்கும் படம் ‘டிஎன்ஏ’. நெல்சல் வெங்கடேசன் இயக்கியுள்ளார். படம் வரும் 20ம் தேதி ரிலீசாகிறது. இது குறித்து அதர்வா கூறியது: டிஎன்ஏ என்றால் திவ்யா, ஆனந்த் என்ற ஹீரோயின், ஹீரோ பெயர்களின் சுருக்கமாகவும் சொல்லலாம். அதே சமயம், டிஎன்ஏ டெஸ்ட் தொடர்பாகவும் படத்தில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அதனால் கூட இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தைச் சுற்றி நடக்கும் ஆக்ஷன் திரில்லர்தான் படம். அதில் அழுத்தமான காதலும் இருக்கும். சமூகத்தாலும் குடும்பத்தாராலும் ஒதுக்கப்பட்ட நானும் நிமிஷா சஜயனும் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் கதை. எங்களுக்கு வரும் பிரச்னையும் படத்தின் திரைக்கதையை வலுவாகக் காட்டும் விதமாக இருக்கும்.
இந்த படத்துக்கு பப்ளி கேரக்டர் செய்யும் ஹீரோயின் தேவைப்படவில்லை. வலுவான கேரக்டர் அது. அதில் தனது நடிப்பை அழுத்தமாகவும் சீரியஸாகவும் செய்யக்கூடிய ஒரு அறிவார்ந்த பெண் கேரக்டர். அதனாலேயே நிமிஷா சஜயன் தேவைப்பட்டார். அவர் படத்தில் வந்த பிறகு படத்துக்கான மதிப்பும் கூடியிருக்கிறது. அந்த வகையில் நடிப்பால் மிரட்டியிருக்கிறார். இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் நல்ல எழுத்தாளர். திரைக்கதையில் அவர் எழுதுவதை திரையில் கொண்டுவர சில மேஜிக்குகள் செய்வார். அது இதில் க்ளிக் ஆகியிருக்கிறது. எனக்கு ஆக்ஷன், ரொமான்ஸ் இரண்டு வித கேரக்டர்கள் செய்வதும் பிடிக்கும். அதே சமயம், ஆக்ஷன் ரொம்பவே வசதியானது. இவ்வாறு அதர்வா கூறினார்.