சென்னை: இளையராஜாவின் மூத்த மகனும், இசை அமைப்பாளருமான கார்த்திக்ராஜாவின் மூத்த மகன் யத்தீஸ்வர் ராஜா, தனது தாத்தா இளையராஜா சென்று வணங்கும் திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில், ‘நமசிவாயா’ என்ற தனது முதல் பாடலை வெளியிட்டார். ரமணர் ஆசிரம நிர்வாகிகளே இதை வெளியிட்டனர். இதுகுறித்து யத்தீஸ்வர் ராஜா கூறுகையில், ‘சிறுவயதில் இருந்தே எனக்கு இசை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், எனது முதல் பாடல் பக்தி பாடலாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். சில ஆலோசனைகளை தாத்தா இளையராஜா சொன்னார். என் தந்தை கார்த்திக்ராஜா பாடல் வரிகளுக்காக உதவி செய்தார். தாத்தா, தந்தை, குடும்பத்தினர் வரிசையில் எனக்கும் திரைப்படத்துக்கு இசை அமைக்க ஆர்வம் இருக்கிறது. வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்றார்.
இளையராஜா குடும்பத் தில் கங்கை அமரன், கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் ஆகியோரும் இசை அமைப்பாளர்களே. யத்தீஸ்வர் ராஜா குறித்து கார்த்திக் ராஜா கூறுகையில், ‘திருவண்ணாமலையில் கிரி
வலம் சென்றபோது பக்தி பாடல்களை கேட்ட யத்தீஸ்வர், அதுபோல் ஒரு பாடலை உருவாக்க ஆசைப்பட்டார். அந்த அடிப்படையில்தான் இப்பாடலை எழுதி இசை அமைத்து பாடியுள்ளார். அவரும் இசை அமைக்க வந்தது, எங்கள் குடும்பத்தினருக்கு அதிக மகிழ்ச்சியையும், பெருமையையும் அளித்துள்ளது’ என்றார்.