2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலை சொல்லும் திருக்குறள்

சென்னை: ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் காமராஜர் வாழ்க்கையை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், மகாத்மா காந்தி வாழ்க்கையை ‘வெல்கம் பேக் காந்தி’ என்ற பெயரிலும் திரைப்படமாக தயாரித்திருந்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், தற்போது திருக்குறளை மையப்படுத்தி ‘திருக்குறள்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இதில் திருவள்ளுவராக கலைச்சோழன், அவரது மனைவி வாசுகியாக தனலட்சுமி நடித்துள்ளனர். தவிர, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக சுப்பிரமணியம் சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோருடன் குணா பாபு, பாடினி குமார் நடித்துள்ளனர். பாடல்கள் எழுதி இளையராஜா இசை அமைத்துள்ளார்.

ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். செம்பூர் கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘இப்படத்தின் தயாரிப்பு பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரனும், தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் கோ.விஸ்வநாதனும் இணைந்துள்ளனர். திருக்குறளின் முப்பாலை மையமாக வைத்தும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலை மையப்படுத்தி யும் படம் உருவாகியுள்ளது. ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிறகுதான் திருக்குறள் உலகம் முழுக்க அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது. வரும் 27ம் தேதி படம் வெளியாகிறது’ என்றார்.

 

Related Stories: