சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பான்வேர்ல்ட் படம்: அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன், தீபிகா படுகோன்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் மிகப் பிரமாண்டமான பான்வேர்ல்ட் படத்தில், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கிறார். அவருடன் இணைந்து நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். உலகம் முழுவதும் வெளியான ‘புஷ்பா 1: தி ரைஸ்’, ‘புஷ்பா 2: தி ரூல்’ ஆகிய படங்களின் மூலமாக பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்து இருக்கும் அல்லு அர்ஜூன், அடுத்து முன்னணி இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி காலை 11 மணியளவில், சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதிக பொருட்செலவில் மிகப் பிரமாண்டமான முறையில் உருவாகும் இப்படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இப்படம் அதிநவீன ெதாழில்நுட்பங்களுடன் உருவாக்கப்படுகிறது. அல்லு அர்ஜூனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதியன்று 43வது பிறந்தநாள். இதையொட்டி இப்படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில் கலாநிதி மாறன், அல்லு அர்ஜூன், அட்லீ ஆகியோர் சந்திக்கும் காட்சிகள் இடம்பெற்றன.

இந்த அறிவிப்பு அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இந்த தகவலை அனைவரும் தங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பகிர்ந்து, தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த படம், அல்லு அர்ஜூன் நடிக்கும் 22வது படம் மற்றும் அட்லீ இயக்கும் 6வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ், அல்லு அர்ஜூன், அட்லீ இணைந்துள்ள பான்வேர்ல்ட் படம் குறித்த அறிவிப்பு, உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

உலக அளவிலான தரத்தில் பான்வேர்ல்ட் படைப்பாக உருவாகும் இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் அடுத்தடுத்து அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். அந்த வகையில், நேற்று காலை 11 மணியளவில் சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில், அல்லு அர்ஜூனுடன் இணைந்து தீபிகா படுகோன் நடிப்பது அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உலகம் முழுவதும் அல்லு அர்ஜூன் மற்றும் தீபிகா படுகோனின் ரசிகர்கள் இத்தகவலை சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து, தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related Stories: