அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு

சென்னை: தமிழில் ‘சினம்கொள்’, ‘உயிர்வரை இனித்தாய்’ போன்ற படங்களில் நடித்தவர், நர்வினி டெரி ரவிசங்கர். அவர் தமிழ் திரையுலகில் நடக்கும் சில சம்பவங்கள் குறித்து வீடியோவில் பேசியுள்ளார். அதில் தனக்கு நடந்த சம்பவங்கள் குறித்து பேசியிருப்பதாவது: ஒரு இயக்குனர் என்பவர் கேப்டன் ஆஃப் தி ஷிப். அவர் தன்னுடன் பணியாற்றும் கலைஞர்களிடம் மரியாதையுடன் பேச வேண்டும். இங்கு சிலர் பிஸிக்கல் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு முன்னதாக மெண்டல் அட்ஜஸ்ட்மெண்ட்டை எதிர்பார்க்கின்றனர். அதாவது, போன் செய்தோ, மெசேஜ் செய்தோ ‘செல்லம்’, ‘பேபி’ என்று சொல்வது மெண்டல் அட்ஜஸ்ட்மெண்ட்.

இது ஒரு கட்டத்தில் எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால், இதுபோன்ற பிஸிக்கல் அல்லது மெண்டல் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு நான் ஒருபோதும் தயாராக இல்லை என்று, எனது தொடர்பில் இருக்கும் அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும் மெசேஜ் அனுப்பினேன். அவர்களில் இயக்குனர் டி.ஆர்.பாலா மட்டும் எனக்கு போன் செய்து, ‘எனக்கு இந்த மாதிரி மெசேஜ் செய்தால், என் மனைவி என்னை பற்றி என்ன நினைப்பார்?’ என்று கேட்டார். அதுபோல், இயக்குனர் கர்ணன் மாரியப்பன் ஒரு புதுப்படத்துக்கு ஆடிஷன் நடத்தினார். அவருக்கு என் ரெஸ்யூமை அனுப்பினேன். அதுதொடர்பாக என்னிடம் போனில் இரட்டை அர்த்தத்தில் பேசினார். அது எனக்கு பிடிக்கவில்லை.

எனது நண்பருடன் ஒரு மாலுக்கு சென்றிருந்தேன். அங்கு நடிகர் அஜ்மல் அமீரை சந்தித்தேன். அவர் என்னிடம் வந்து, ‘நான் எனது அடுத்த படத்துக்கு ஹீரோயின் தேடிக்கொண்டு இருக்கிறேன். ஆடிஷனுக்கு வருகிறீர்களா?’ என்று கேட்டார். மறுநாள் நான் ஆடிஷனுக்கு சென்றேன். அங்கு அவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அவருடன் டான்ஸ் ஆடச்சொல்லி வற்புறுத்தினார். நான், முடியாது என்று சொன்னேன். என்னை கட்டிப்பிடிக்க முயற்சித்தார். உடனே யாரோ ஒருவர் காலிங்பெல்லை அழுத்தினார்.

அஜ்மல் கதவை திறந்ததும் நான் வெளியே ஓடி வந்துவிட்டேன். இந்த விஷயத்தை நான் அப்படியே விட்டுவிட்டு வந்திருக்க கூடாது. அன்றிரவு நான் டென்மார்க் நாட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. சில மாதங்கள் கழித்து இந்த விஷயத்தை திரைத்துறையை சேர்ந்த எனது நண்பர் ஒருவரிடம் சொன்னேன். அவர் அஜ்மலை நேரில் அழைத்து கண்டித்துள்ளார். அப்போதே அஜ்மல் மீது போலீசில் புகார் கொடுத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், சினிமாவில் பல நல்ல மனிதர்களும் இருக்கின்றனர்.

Related Stories: