சென்னை: ‘முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ’ என்ற ஒரே பாடலால் உலக ரசிகர்களை ஈர்த்துள்ளார் பாடகி சின்மயி. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில பின்னணி பாடகர்கள், தனி இடம் பிடித்து மக்களை கவர்ந்து வந்துள்ளனர். இன்றைய காலத்தில் அதுபோன்ற ஒரு குரலுக்கு சொந்தக்காரர்தான் சின்மயி. பாடுவது மட்டுமின்றி, கதாநாயகிகளுக்கு படத்தில் டப்பிங்கும் பேசுவார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடைக்கு வந்து சின்மயி பாடிய ‘முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ’ பாடல்தான் இப்போது உலகம் முழுவதுமுள்ள தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இந்த பாடலை தமிழில் படத்துக்காக பாடியிருப்பவர் தீ. ஆனால் சில காரணங்களால் ‘தக் லைஃப்’ பட இசை விழாவுக்கு தீ வராததால், சின்மயி இந்தப் பாடலை பாடினார்.
இதே பாடலின் இந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷனை சின்மயிதான் படத்துக்காக பாடியிருந்தார். ஆனால் தமிழ் சினிமாவில் சின்மயிக்கு தடை இருப்பதால் அவரால் தமிழ் படத்துக்காக இந்த பாடலை பாட முடியவில்லை. இந்நிலையில்தான் அன்று மேடையேறி இப்பாடலை பாடியபோது, அரங்கில் இருந்த அத்தனை பேரின் மனங்களையும் அலேக்காக தூக்கிச் சென்றுவிட்டார் சின்மயி. அதன் பிறகு யூடியூபில் இந்த பாடல் சின்மயி குரலில் வந்தபோது ஒவ்வொரு ரசிகனும் லயித்துப்போனான். பெரும்பாலான ரசிகர்களின் ஒரே கருத்தாக இருந்தது, தீயை விட சின்மயி சிறப்பாக பாடியிருக்கிறார் என்பதுதான். வழக்கமாக எஸ்.பி.பி. பாடும்போது, தனது பாடலில் ஆங்காங்கே சங்கதிகள் சேர்ப்பார். லேசான சிணுங்கல், சிரிப்பு என்றெல்லாம் இணைப்பார். அது அந்த பாடலை மேலும் மெருகூட்டிவிடும். அந்த மாதிரி சின்மயி இந்த பாடலில் சேர்த்த சங்கதிகள், ரசிகர்களை கிறங்கடித்துவிட்டது.
குறிப்பாக பல்லவிக்கு பிறகும் வரும் ‘‘காலைக் கனவினில் காதல் கொண்டேன்… கண் விழித்தேன் அவன் காணவில்லை… என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை என்ன செய்தும் வலி தீரவில்லை…’’ வரிகளை அவர் பாடிய விதம், எத்தனை முறை கேட்டாலும் இதயத்தை தொடும் உணர்வினைத் தரும். மொத்த பாடலையுமே ரசித்து ரசித்து அவர் பாடியிருந்த விதத்தில்தான் ரசிகர்களும் இந்த பாடலின் மீதும் ரஹ்மானின் இசையின் மீதும் சின்மயின் குரலின் மீதும் பைத்தியமாகிப் போயிருக்கிறார்கள். ‘தக் லைஃப்’ படம் நேற்று வெளியான நிலையில் அதில் ‘முத்த மழை’ பாடலே இடம்பெறவில்லை. சின்மயி குரலுக்கு ஆதரவு குவிவதால், தீ குரலில் அந்த பாடல் திரையில் வந்தால் ரசிகர்கள் ஏற்பார்களா என்ற சந்தேகம் காரணமாக பாடல் நீக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
‘‘இந்த ஒரே பாடலால் ரசிகர்களை தனது குரலால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் சின்மயி. தமிழ் சினிமா இசைக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் சின்மயி, பாடவும் டப்பிங் பேசவும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளத தடையை தமிழ் சினிமாத்துறை விலக்கிக் கொள்ள வேண்டும்’’ என உலகம் முழுவதுமுள்ள தமிழ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்த ஒரே பாடலால் ரசிகர்களை தனது குரலால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் சின்மயி. தமிழ் சினிமா இசைக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் சின்மயி, பாடவும் டப்பிங் பேசவும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளத தடையை தமிழ் சினிமாத்துறை விலக்கிக் கொள்ள வேண்டும்.