நான் சொன்ன வார்த்தைகள், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதையும் மட்டுமே வெளிப்படுத்தின. கன்னட மொழியின் வளமான பாரம்பரியம் குறித்து எந்த சர்ச்சையோ, விவாதமோ இல்லை. தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் பெருமைமிக்க இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. கன்னடர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதோ அல்லது பகைமையை ஏற்படுத்துவதோ இந்த அறிக்கையின் நோக்கம் அல்ல.
சினிமா மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும், ஒருபோதும் அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுவே எனது அறிக்கையின் நோக்கம், பொது அமைதியின்மைக்கும் பகைமைக்கு நான் ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை, ஒருபோதும் அதற்கு இடம் கொடுக்க விரும்பவில்லை. எனது வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளப்படும். கன்னட மக்கள் அவர்கள் தாய் மொழி மீது வைத்திருக்கும் அன்பின் மீது எனக்கும் மரியாதை உண்டு. இந்த தவறான புரிதல் தற்காலிகமானது என்றும், நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் வலியுறுத்துவதற்கான இது ஒரு வாய்ப்பு என்றும் நான் மனதார நம்புகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கடிதத்தில் கூறியுள்ளார்.