சென்னை: கேளிக்கை வரி 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தியேட்டர் டிக்கெட் கட்டணம் குறையாது என தியேட்டர் அதிபர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.தமிழ் படங்களுக்கான கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என கமல்ஹாசன் விழா ஒன்றில் கோரிக்கை வைத்தார். அதே விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்த கோரிக்கை கண்டிப்பாக பரிசீலிக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
அதன்படி நேற்றுமுன்தினம் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து உத்தரவிடப்பட்டது. இதனால் தமிழ் திரையுலகினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தன. கேளிக்கை வரி குறைந்ததால் தியேட்டர் டிக்கெட் கட்டணமும் குறையலாம் என மக்கள் எதிர்பார்த்தனர்.
இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, ‘‘கேளிக்கை வரி குறைந்தாலும் ஜிஎஸ்டி எங்களுக்கு பெரும் சோதனையாகவே உள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக தியேட்டர் கட்டணம் உயர்த்தவில்லை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் தியேட்டர் கட்டணம் குறைவுதான். அதனால் தியேட்டர் கட்டணம் குறைக்க வாய்ப்பில்லை’’ என்றார்.