முன்னாள் உலக அழகியும், இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவருமான பிரியங்கா சோப்ரா, நல்ல குரல் வளம் கொண்ட பாடகியும் கூட. தற்போது சில ஆங்கிலப் படங்களில் நடித்து வரும் அவர், மகேஷ் பாபு ஜோடியாக ‘எஸ்எஸ்எம்பி29’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். இதை எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்குகிறார். திறமையான நடிகை என்றாலும், அடிக்கடி தனது கருத்துகளால் சர்ச்சையில் சிக்கி தவிப்பார். அந்தவகையில் சமீபத்தில் பெண்களின் கன்னித்தன்மை குறித்து அவர் பேசிய கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசும்போது, ‘கன்னித்தன்மை என்பது ஒரே இரவு விஷயம். அதனால், தங்களுக்கு கன்னிப் பெண்தான் வேண்டும் என்று ஆண்கள் சொல்வது சரியல்ல. அதற்கு பதிலாக நல்ல நடத்தையும், ஒழுக்கமும் கொண்ட பெண்கள் வாழ்க்கைக்கு தேவை. உறவுகள் முற்றிலும் சீர்குலைந்து வரும் இந்த காலக்கட்டத்தில், குறிப்பாக டேட்டிங், திருமணத்துக்கு முன்பே இன்பத்தை அனுபவிப்பது போன்றவை சாதாரணமாகி விட்டது. நீங்கள் திருமணம் செய்யும் பெண்கள் கன்னியா என்று பார்க்க வேண்டாம். திருமணம் செய்ய கன்னிப் பெண்ணே வேண்டும் என்று சொல்வது சரியல்ல’ என்று தெரிவித்துள்ளார்.
அவரது கருத்துக்கு எதிர்வினையாற்றிய சிலர், ‘நீங்கள் பணத்தை பார்த்து திருமணம் செய்தீர்களா? ஆணின் குணத்தை பார்த்து திருமணம் செய்தீர்களா? உங்கள் ஆசையை விட்டுவிட்டு, பிறகு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.