ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்குனராக அறிமுகமான படம், ’96’. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனகராஜ் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதையடுத்து இப்படத்தின் 2ம் பாகத்துக்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. ‘96’ படத்துக்கு பிறகு கார்த்தி, அரவிந்த்சாமி, திவ்யா, ராஜ்கிரண் நடித்த ‘மெய்யழகன்’ என்ற படத்தை பிரேம்குமார் இயக்கினார். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது.
இதையடுத்து ‘96’ படத்தின் 2ம் பாகம் குறித்து பிரேம் குமார் அவ்வப்போது அப்டேட்டுகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், 2ம் பாகத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாகவும், அவருக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இத்தகவலை மறுத்து பிரேம் குமார் வெளியிட்டுள்ள பதிவில், ‘இது வழக்கம்போல் ஒரு தவறான செய்தியாகும். ‘96’ படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டுமே ‘96’ படத்தின் 2ம் பாகத்தை உருவாக்க முடியும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். பிரதீப் ரங்கநாதனை நான் அணுகி பேசியது, வேறொரு படத்தில் அவரை நடிக்க வைப்பதற்காக என்ற விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள்.
அவருக்கு நான் சொன்ன கதை வேறு. அதற்கும், ‘96’ படத்தின் 2ம் பாகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாளுக்கு நாள் பெருகி வரும் தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே, நான் சொன்ன உண்மையை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் 2ம் பாகத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவில்லை என்பது உறுதியாகியுள்ளது.