சென்னை: நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கு ஒரு பெரிய தொகைக்கு கொடுத்து இருந்தார். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தான் அது ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் பாடல் வரிகள், காட்சிகளை பயன்படுத்த அனுமதி பல முறை கேட்டும் தனுஷ் கொடுக்கவில்லை என நயன்தாரா குற்றம் சாட்டி இருந்தார். தனது திருமண வீடியோ வெளியாகும் இரண்டு நாட்கள் முன்பு அதை அவர் அறிக்கையாக வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவுக்கு ப்ரோமோஷனாக தான் இந்த சர்ச்சையை கிளப்பினார் நயன்தாரா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். இந்நிலையில் ஒரு பேட்டியில் நயன்தாரா இந்த சர்ச்சை பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது: சரி என எனக்கு தோன்றும் விஷயத்தை செய்ய நான் ஏன் பயப்பட வேண்டும். நான் தவறு செய்தால் தான் பயப்பட வேண்டும். நான் பப்ளிசிட்டிகாக ஒருவரது இமேஜை கெடுத்தேன், படத்தின் விளம்பரத்துக்காக அதை செய்தேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். என் நோக்கம் அது அல்ல.
அவரது மேனேஜர், நண்பர்கள் மூலமாக பல முறை தனுஷை அணுகினோம். ஆனால் முடியவில்லை. அவர் எனது நண்பராக இருந்தார். ஆனால் கடந்த 10 வருடங்களில் அது மாறிவிட்டது. அவருக்கு அவரது காரணங்கள் இருக்கலாம். நான் அவரது மேனேஜர் உடன் பேசினேன். என்ன தான் பிரச்னை என தெரிந்துகொள்ள தனுஷ் உடன் போனில் பேச வேண்டும் என கூறினேன். ஒரே ஒரு போன் கால் தான் கேட்டேன். அவர் என் மீது கோபமாக இருக்கிறாரா, அல்லது சுற்றி இருப்பவர்கள் அதை உருவாக்குகிறார்களா என தெரிந்துகொள்ள நினைத்தேன்.
எதாவது தவறான புரிதல் இருந்தால் அதை பேசி சரி செய்துகொள்ளலாம் என விரும்பினேன். சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டாம். ஆனால் எங்காவது நேரில் பார்த்தால் ‘ஹாய்.. எப்படி இருக்கீங்க’ என பேச முடியும். அப்படியாவது நட்பு இருக்க வேண்டும். அதற்காக தான் நான் முயற்சித்தேன்.
டிரெய்லரில் இருந்த ஷூட்டிங் ஸ்பாட் காட்சி எங்கள் போனில் எடுக்கப்பட்ட ஒன்று. அது அவரது படக் காட்சி, அவருக்கு உரிமை இருக்கிறது என சொல்கிறார்கள். நான் படத்தில் இருந்து எந்த காட்சியையும் எடுத்து பயன்படுத்தவில்லை. பலரும் அவர் (தனுஷ்) மீது மரியாதை வைத்திருக்கிறார்கள். எனக்கும் அவர் மீது மரியாதை இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் தனுஷ் செய்தது அநியாயம். அதனால் தான் நான் பேசினேன். இவ்வாறு நயன்தாரா கூறி இருக்கிறார்.