திருவனந்தபுரம்: கேரளாவில் வருடந்தோறும் அரசு கலைநிகழ்ச்சியாக ‘கலோல்சவம்’ என்ற கலைத்திருவிழா நடந்து வருகிறது. இதில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவிகளுக்கு நடனம் சொல்லித்தர வரும் நடிகைகளுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான கலோல்சவம் நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு நடனம் சொல்லித்தர நடிகை ஒருவரை அணுகியதாகவும், அவர் சில நாட்களுக்கு தினமும் 10 நிமிடங்கள் வரை நடனம் சொல்லித்தர 5 லட்ச ரூபாய் கேட்டதாகவும், கேரள கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி குற்றச்சாட்டினார். ‘இதுபோன்ற கலைநிகழ்ச்சிகளில் பிரபலமாகி, பிறகு சினிமாவில் வாய்ப்பு பெற்று உயரத்துக்கு சென்றவர்கள், அதை மறந்து இதுபோல் அடாவடியாக அதிக பணம் கேட்கிறார்கள்’ என்று அவர் காட்டமாக கூறியிருந்தார்.
சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை அவர் சொல்லவில்லை என்பதால், அவர் எந்த நடிகையைப் பற்றி குற்றம் சாட்டினார் என்று சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் விவாதம் நடத்தினர். இந்நிலையில், மலையாள ‘த்ரிஷ்யம்’, தமிழ் ‘பாபநாசம்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ள ஆஷா சரத் தானாக முன்வந்து விளக்கம் அளித்துள்ளார். அது வருமாறு: மாணவிகளுக்கு நடனம் சொல்லித்தர பணம் கேட்ட விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் நான்தான் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தேன். அதற்காக அரசிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்றார்.