×

மனைவி பேச்சை கேட்டு பிரச்னை பண்ணும் மகன்: மோகன்பாபு பரபரப்பு ஆடியோ

சென்னை: நடிகர் மோகன்பாபு மற்றும் அவரது மகன் இடையே சொத்து பிரச்னை எழுந்துள்ளது. மோகன்பாபுவை மகன் மனோஜ் மன்ச்சு தாக்கியதாக பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் மோகன்பாபு தனது மகன் மனோஜுக்கு அறிவுரை வழங்கும் வகையில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதில் மோகன்பாபு பேசியுள்ளதாவது: மனோஜ் நீ அதிகமாக குடிக்கிறாய். நானும் தான் குடிக்கிறேன். அதற்காக இப்படியா?. வீட்டில் உள்ள வேலைக்காரர்களை அடிக்கிறாய், திட்டுகிறாய்.

உனக்கு அவர்களிடம் எந்த அதிகாரமும் கிடையாது. நான் பார்த்து அவர்களை வேலைக்கு வைத்துள்ளேன். வீட்டை விட்டு வெளியேறுகிறாய். மீண்டும் வருகிறாய். மன்னிப்பு கேட்கிறாய். சரி திருந்திவிடுவாய் என்று விட்டால் மறுபடியும் அதே போன்று நடந்து கொள்கிறாய். உன் அண்ணனை கொலை செய்வேன் என்று மிரட்டுகிறாய். என்னை பார்க்க யார் வந்தாலும் அவர்களை மோசமான வார்த்தைகளால் வசை பாடுகிறாய். இது நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்து. இதை மூன்று பேருக்கும் பகிர்ந்து எழுதுவேன். இல்லாவிட்டால் தானதர்மம் செய்வேன் இல்லை வீணாக கூட அழிப்பேன். நமது கல்லூரியில் எத்தனை பேருக்கு இலவச கல்வி வழங்குகிறோம். சிலரிடம் கட்டணம் வாங்குகிறோம்.

இதற்கான கணக்கு வழக்குகள் சரியாக பராமரிக்கப்படுகிறது. அந்த நிர்வாகத்தில் தலையிடுகிறாய். அதை சீரழிக்க பார்க்கிறாய். நீ ஏன் இப்படி மாறிவிட்டாய் என்று தெரியவில்லை. உன்னால் உனது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறாள். உன் குழந்ைத பத்திரமாக எங்களிடம் உள்ளது. நீ எப்போது வேண்டுமானாலும் வந்து அழைத்து செல்லலாம். இல்லை என்றாலும் நாங்கள் வளர்ப்போம். பத்திரிகையாளர்கள் உண்மை தெரியாமல் அவர்களுக்கு தோன்றியதை எழுதுகிறார்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது.

எனவே இத்தோடு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை விடுக்கிறேன். போலீஸ் புகார் குறித்து சட்டப்படி நானும் எதிர்கொள்வேன். சென்னையில் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு உழைத்து இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்பதை நீயும் அறிவாய், என்னை சார்ந்தவர்களும் அறிவார்கள். மனோஜ் நீ என் மகன்தான். ஆனால் உன் மனைவி பேச்சை கேட்டுக்கொண்டு மிக மோசமாக நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு மோகன்பாபு பேசியுள்ளார்.

Tags : Mohan Babu ,Chennai ,Manoj Manchu ,Manoj ,
× RELATED சொத்து சண்டையால் விபரீதம்:...