ஐதராபாத்: தெலுங்கில் வெளியான ‘35 சின்ன கத காடு’ என்ற படத்தில் இடம்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலின் காட்சிகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில், படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், ஓடிடியில் வெளியான ‘35 சின்ன கதா காடு’. இந்த படம் 2 மாதமாக ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்படவில்லை. ஆனால் சில நாட்களுக்கு முன் இப்படத்துக்கான பார்வையாளர்கள் அதிகரித்தனர்.
இதையடுத்து படத்தில், நாயகன், ஏழுமலையான் கோயிலில் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏழுமலையான் கோயிலை சுற்றி பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இதனை படம் பிடிப்பதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக, திருப்பதி கோயில் தேவஸ்தானத்துக்கு புகார் அனுப்பப்பட்டது. இதையடுத்து தேவஸ்தான கண்காணிப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது.
அண்மையில் புஷ்பா பட பாடலுக்கு இளம்பெண் ஒருவர் திருப்பதி மலையடிவாரத்தில் நடனம் ஆடி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு படத்தின் பல காட்சிகளை யாருக்கும் தெரியாமல் திருப்பதி கோயிலில் படமாக்க இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கோயில் தரப்பில் யாராவது ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது. படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் இருக்கிறார்கள்.