லாஸ்ஏஞ்சல்ஸ்: மும்பையைச் சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய திரைப்படம் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹ்ருது ஹாரூன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தங்கள் வாழ்க்கை லட்சியத்தை அடைவதற்காக, கேரளாவில் இருந்து மும்பைக்கு வரும் இரு பெண்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் படத்தின் கரு.
முன்னதாக, பிரான்ஸில் நடைபெற்ற 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படம் வென்றது. இதனைத் தொடர்ந்து மற்றொரு சாதனையாக கோல்டன் குளோப் விருதுக்கும் இப்படம் சிறந்த இயக்குநர் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த இயக்குநர் ஒருவர், சிறந்த இயக்குநர் பிரிவில், கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரையாகியுள்ளது இதுவே முதல்முறையாகும். மேலும் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவிலும் பரிந்துரையாகியுள்ளது. கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா, அடுத்தாண்டு ஜனவரி 6ம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ளது. முன்னதாக, இந்தியா சார்பில் ஏ.ஆர்.ரஹ்மான் கோல்டன் குளோப் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.