பாராசூட் வெப்தொடர் விமர்சனம்

வீடு, வீடாக கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் கிஷோர், தனது மனைவி கனி, மகன் சக்தி, மகள் இயல் ஆகியோருடன் எளிய வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார். குறைந்த வருமானம் என்றாலும், வாரிசுகளை பிரபலபள்ளி ஒன்றில் அதிக செலவு செய்து படிக்க வைக்கும் அவர், அளவுக்கு மீறிய கண்டிப்பைக் காட்டுகிறார். அவரைப் பார்த்த பயத்தில் சக்தி சிறுநீர் கழித்துவிடுகிறான். இந்நிலையில், தனது தங்கை இயலின் பிறந்த நாளில் அவளை மகிழ்விப்பதற்காக, கிஷோரின் இருசக்கர வாகனத்தில் யாருக்கும் தெரியாமல் சக்தி பயணம் செய்கிறான்.

நீண்ட நேரமாகியும் கூட மகனும், மகளும் வீடு திரும்பாததால் பயந்து நடுங்கிய கனி, போலீசில் புகார் அளிக்கிறார். ஆனால், வேறொரு முக்கியமான பிரச்னையில் கிருஷ்ணா குலசேகரன் தலைமையில் போலீசார் தீவிரமாக மூழ்கியுள்ளனர். காணாமல் போன மகனையும், மகளையும் கிஷோர், கனி தம்பதி கண்டுபிடித்தார்களா என்பது மீதி கதை. 5 எபிசோடுகள் கொண்ட இந்ததொடரில் கிருஷ்ணா குலசேகரன், கிஷோர், கனி, பவா செல்லத்துரை, காளி வெங்கட், சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். அண்ணன், தங்கையாக நடித்துள்ள சக்தி, இயல் ஆகியோருடைய நடிப்பு சிறப்பானது.

சிறுவர், சிறுமியரின் யதார்த்தமான உலகத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளனர். அழுத்தமான சில வசனங்களின் மூலம் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கும் கே.ஸ்ரீதரை பாராட்டலாம். பாராசூட் என்ற இருசக்கர வாகனத்தைப்போல் திரைக்கதை வேகமாக நகர்கிறது. இதை ராசு ரஞ்சித் இயக்கியுள்ளார். குழந்தைகளிடம் அளவுக்கு மீறிய கண்டிப்பு கூடாது என்று பாடம் நடத்தி இருக்கிறார். ஓம் நாராயண் ஒளிப்பதிவு, ரிச்சர்ட் கெவின் எடிட்டிங், யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அனைத்தும் இந்த வெப்தொடரின் பலமான தூண்கள். கிருஷ்ணா குலசேகரன் தயாரித்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.

Related Stories: