உலகிலுள்ள எல்லா உயிர்களையும் ஆக்குபவர்களும், அழிப்பவர்களும் மாயர்களே. அப்படிப்பட்ட மாயர்களுக்கும், நம் மூதாதையர்களுக்கும் புராணகாலத்தில் ஒரு உறவு இருந்தது. அது என்ன என்பது ஒரு கதை. 13 நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் வினோத் மோகன், போலீஸ் அதிகாரி ஜான் விஜய்யின் பிடியில் சிக்கி, பிறகு அவரால் தீர்க்க முடியாத என்கவுண்டர் அசைன்மெண்டுகளை செய்து முடிக்கிறார். அப்போது உலகம் அழிகிறது. வினோத் மோகன் யார்? பிறகு அவர் எடுக்கும் அவதாரம் என்ன? மீண்டும் உலகம் சிருஷ்டிக்கப்படுகிறதா என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது படம்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தை ஜே.ராஜேஷ் கண்ணா எழுதி இயக்கியுள்ளார். பீரியட் பிலிம் என்பதால், சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளை திறம்பட கையாண்டுள்ளனர். மாயர்கள் உலகத்தில் தொடர்புடையவராக வினோத் மோகன் நடித்துள்ளார். ஆஸ்திரேலிய ஆங்கிலப் படத்திலும், மலேசிய தமிழ்ப் படத்திலும் நடித்துள்ள அவர், படம் முழுக்க ஒரே முகபாவனையுடன் வந்தாலும், சண்டைக்காட்சிகளில் பொளந்து கட்டியிருக்கிறார். அவரது காதலி பிந்து மாதவி, இயக்குனர் சொன்ன மாதிரி நடித்திருக்கிறார்.
வழக்கமான வில்லத்தனத்தை ஜான் விஜய், சாய் தீனா, ராஜசிம்மன், ரஞ்சனி நாச்சியார் வெளிப்படுத்தியுள்ளனர். கஞ்சா கருப்பு, ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நன்கு நடித்துள்ளனர். கே.அருண் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாயன் உலகம் மிரட்டலாக இருக்கிறது. எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைத்துள்ளார். பாடல்கள் கதைக்கேற்ப பயணித்தாலும், பின்னணி இசை சற்று இரைச்சலாக இருப்பதை கவனித்திருக்கலாம். மாயன் உலகத்துக்கும், நிஜ உலகத்துக்குமான இசை வித்தியாசமாக இருக்கிறது. புதிய உலகம் பிறந்தாலும், மனிதர்களின் பகை உணர்வு மாறாது என்று சொல்லி, 2ம் பாகத்துக்கு வழிவிட்டுள்ளனர்.