வங்கி ஊழியர்கள் சத்யதேவ், பிரியா பவானி சங்கர் இருவரும் காதலர்கள். சின்ன மிஸ்டேக்கால் பணச்சிக்கலில் மாட்டிக்கொண்ட பிரியா பவானி சங்கரை, உடனே வேறொரு கணக்கில் இருந்து பணத்தை மாற்றி, அவர் தப்பிக்க சத்யதேவ் உதவுகிறார். இந்நிலையில், தொழிலதிபர் டாலி தனஞ்செயாவுக்கு சில நாட்களுக்குள் சத்யதேவ் 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதை அவரால் கொடுக்க முடிந்ததா, அதற்காக சத்யதேவ் எடுக்கும் ரிஸ்க் என்ன என்பது மீதி கதை. பொருளாதார குற்றப்பின்னணியில் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் கலந்த திரில்லர் படத்தை இயக்கியுள்ளார், ஈஸ்வர் கார்த்திக்.
செக் பயன்பாட்டில் ஏற்படும் சிக்கல்கள், கேட்கப்படாத தொகை, நாமினி இல்லாத வங்கிக் கணக்குகள் ஆகியவற்றை ஹீரோ எப்படி தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறார் என்கிற ‘ஒயிட் காலர்’ தகிடுதத்தங்களை திரைக்கதை சொல்கிறது. சத்யதேவ், டாலி தனஞ்செயா இருவரும் வலுவான கேரக்டரில் போட்டி போட்டு நடித்துள்ளனர். அழுத்தமான கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் தனி முத்திரை பதித்துள்ளார். ஹீரோவுக்கு உதவும் பாபா கேரக்டரில் சத்யராஜ், தன் அனுபவ நடிப்பை வழங்கி அசத்தியுள்ளார். சத்யா அக்காலாவின் காமெடி குறிப்பிடத்தக்கது. சுரேஷ் மேனன், சுனில், ராமச்சந்திர ராஜூ, ராமராஜூ போன்றோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
முற்பகுதி ஜெட் வேகம். பிற்பகுதியில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். ஆங்காங்கே லாஜிக் மீறினாலும், அனில் கிரிஷ் எடிட்டிங் கச்சிதம். ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும், சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவும் படத்தை தாங்கி நிற்கும் தூண்கள். ‘லக்கி பாஸ்கர்’ சாயல் இருந்தாலும், ‘ஜீப்ரா’வின் புதிய கணக்கு ரசிகர்களின் மூளைக்கு அதிக வேலை வைத்திருக்கிறது. 2ம் பாகத்துக்கான லீட் கொடுத்துள்ளனர்.