×
Saravana Stores

நிறங்கள் மூன்று: விமர்சனம்

பள்ளி ஆசிரியர் ரஹ்மானின் மகள் அம்மு அபிராமி திடீரென்று காணாமல் போகிறார். ரஹ்மானும், அம்மு அபிராமியைக் காதலிக்கும் துஷ்யந்தும் அவரை தேடி அலைகின்றனர். திரைப்பட இயக்குனராகும் கனவில் மிதக்கும் அதர்வா, பிரபல இயக்குனர் ஜான் விஜய் தனது கதையைத் திருடி படம் இயக்குவதை அறிந்து கொதிக்கிறார். அது தனது கதை என்று நிரூபிக்க தேவைப்படும் ‘ஸ்க்ரிப்ட் காப்பி’ தொலைந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில், போதைக்கு அடிமையாகிறார் அதர்வா முரளி. துணிச்சல் மிகுந்த காவல்துறை அதிகாரி சரத்குமார், அமைச்சர் சந்தானபாரதியின் மகன்களைக் கைது செய்ததால் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார். அம்மு அபிராமி கிடைத்தாரா? அதர்வா இயக்குனர் ஆனாரா? சரத்குமாரின் நிலை என்ன? என மூன்று கதைகளுக்கும், கேரக்டர்களுக்கும் என்ன தொடர்பு என்பது மீதி கதை.

ஒரே இரவில் நடக்கும் 3 சம்பவங்களையும், அவற்றில் தொடர்புடைய மனிதர்களையும் 3 நிறங்களாகப் பிரித்து, சம்பவங்களை எதிர்பாராத கோணத்தில் சொல்லும் மாறுபட்ட திரைக்கதையுடன் ‘துருவங்கள் பதினாறு’ கார்த்திக் நரேன் எழுதி இயக்கியுள்ளார். நல்லவர்கள், தீயவர்கள் மற்றும் நன்மையும், தீமையும் கலந்தவர்கள் என்று, மூன்று விதமான மனிதர்கள் இருக்கின்றனர் என்பதை சொல்ல, ‘நிறங்கள் மூன்று’ என்று பெயரிட்டுள்ளார். நல்லவர்களிடம் தீய குணங்களும், கெட்டவர் போல் தோன்றுபவர்களிடம் சில நல்ல குணங்களும் இருக்கலாம் என்ற கிளைமாக்ஸ் ரசிக்க வைக்கிறது.

காதலி அம்மு அபிராமியைக் கண்டுபிடிக்க அலையும் கேரக்டரில் துஷ்யந்த் சிறப்பாக நடித்துள்ளார். அதுபோல், அம்மு அபிராமியும் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மகளைக் காணாமல் துடிக்கும்போது ரஹ்மானின் நடிப்பு அழுத்தமாக இருக்கிறது. போதைக்கு அடிமையான நிலையில், அதர்வாவின் பாடிலாங்குவேஜ் மற்றும் மேனரிசங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. துணிச்சலான காவல்துறை அதிகாரி கேரக்டருக்கு சரத்குமார் மேலும் கம்பீரம் சேர்த்துள்ளார். சின்னி ஜெயந்த், சந்தானபாரதி, ஜான் விஜய் உள்பட பலர் நிறைவாக நடித்துள்ளனர். இரவுநேரக் காட்சிகளை டிஜோ டாமியின் கேமரா யதார்த்தமாகப் படமாக்கியுள்ளது. திரைக்கதை குழப்பமின்றி நகர, ஸ்ரீஜித் சாரங்கின் எடிட்டிங் உதவி செய்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம். இயக்குனர் இன்னும் கூட பல காட்சிகளை அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

Tags : Rahman ,Ammu Abirami ,Dushyant ,Ammu Abhirami ,Atharva ,John Vijay ,
× RELATED சாமானிய மக்களை காட்டிலும்...