சென்னை: காரைக்கால் பகுதி உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான கிரைம் திரில்லர் படம், ‘லாரா’. மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம்.கே பிலிம் ஒர்க்ஸ் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார். அசோக் குமார், அனுஸ்ரேயா ராஜன், மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி, கார்த்திகேசன் நடித்துள்ளனர். ஆர்.ஜே.ரவீன் ஒளிப்பதிவு செய்ய, ரகு ஸ்ரவன் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவரும், நடிகருமான ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது: ஒரு படத்துக்கு நல்ல கதை வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், அது தேவையில்லை. மொக்கை கதையை வைத்துக் கொண்டுதான் ‘சிங்காரவேலன்’ என்ற படத்தை இயக்கினேன்.
கலைஞானி கமல்ஹாசனை வைத்துக்கொண்டு, கதையே இல்லாமல் படமெடுக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும், எவ்வளவு லொள்ளு வேண்டும்? சிறுவயதில் ஜட்டி, பனியனுடன் காணாமல் போன ஒரு சின்னப்பெண்ணை தேடிக்கண்டுபிடித்து திருமணம் செய்யும் ஹீரோ என்பது கதை. இதைச் சொன்னால் இப்போது ஒப்புக்கொள்வார்களா? அப்படி எடுத்த படம் அது. கதைக்கான காட்சிகளை எல்லாம் பெரிதாக யோசிக்கவில்லை. ஏதோ போகிற போக்கில் எழுதியதுதான். இந்தப் படம் வெளியானபோது நான், ‘மூளையைக் கழற்றி வீட்டிலேயே வைத்துவிட்டு வாருங்கள்’ என்று விளம்பரங்கள் செய்தேன். அப்படி ஒரு நம்ப முடியாத கதை அது. பொள்ளாச்சியில் இருந்து ஒருவன் கருவாட்டை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வருவான். இங்கே கிடைக்காத கருவாடா என்று அப்போது யாரும் கேட்கவில்லை. கேள்வியே கேட்காத அளவுக்கு அன்றைய ரசிகர்கள் இருந்தனர்.