லாஸ் ஏஞ்சல்ஸ்: பிருத்விராஜ் சுகுமாறன், அமலா பால் நடிப்பில் வெளியான ‘ஆடு ஜீவிதம்’ என்ற படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு HMMA (ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா அவார்ட்ஸ் 2004) விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ப்ளஸ்ஸி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம், ‘ஆடு ஜீவிதம்’. இப்படத்தின் பின்னணி இசைக்காக, ஹாலிவுட்டின் உயரிய விருதான HMMA விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் நடந்தது. இதில் சுயாதீன திரைப்படத்துக்கான (அந்நிய மொழி) பிரிவில் போட்டியிட்ட ‘ஆடு ஜீவிதம்’ என்ற படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது வழங்கப்பட்டது.
ஆஸ்கர் விருதுக்கான முன்னோட்டமாக இந்த விருது கருதப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை குறித்து பேசிய இயக்கு னர் ப்ளஸ்ஸி, ‘ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும், பாடல்களும் மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளன. படத்தின் பிஜிஎம், பாலைவனத்தில் போராடுகின்ற கேரக்டரின் உணர்வுகளுக்கு உயிரூட்டி இருக்கிறது. ஒருவகையில் பின்னணி இசையே தனியாக ஒரு கதை சொல்கிறது. தவிர, கேரக்டர்களுடைய உணர்ச்சிகளின் ஆழத்தையும் பிரதிபலிக்கிறது’ என்றார்.