சென்னை: தனுஷுக்கு எழுதிய கடிதத்தை நயன்தாரா நேற்று அறிக்கையாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இந்த பரபரப்பான அறிக்கையில் நயன்தாரா கூறியிருப்பது: தனுஷுக்கு வணக்கம். பல தவறான விஷயங்களை சரிசெய்வதற்காகவே வெளிப்படையான இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்கள் தந்தை கஸ்தூரிராஜா உறுதுணையுடன், சிறந்த இயக்குனரான உங்கள் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் திரைத்துறைக்கு வந்து பிரபல நடிகராக மாறியிருக்கும் நீங்கள், நிச்சயமாக இதைப் புரிந்துகொள்ள வேண்டும். சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் தனியொரு பெண்ணாக, சவால்கள் நிறைந்த திரைத்துறைக்கு வந்து, எனது கடின உழைப்பாலும், நேர்மையான அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை நான் அடைந்திருக்கிறேன். நேர்மறையான எனது பயணத்தை என்மீது அன்பு செலுத்தும் எனது ரசிகர்களும், திரைத்துறையினரும் நன்றாகவே அறிவார்கள். நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘நயன்தாரா பியான்ட் தி பைரி டேல்’ என்ற ஆவணப்படத்தை என்னைப்போலவே ஏராளமான எனது ரசிகர்களும், நலம்விரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ரசிகர்களின் அந்த ஆர்வத்தைப் பூர்த்தி செய்யவே இதில் பணியாற்றியிருக்கும் ஒவ்வொருவரும் பல்வேறு தடைகளையும் மீறி, அனைத்துப் பணிகளையும் முடித்து, தற்போது வெளியீட்டுக்கு தயார் செய்திருக்கிறோம். உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமின்றி. ஆவணப்பட பணிகளில் அரப்பணிப்புடன் பணியாற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்துள்ளோம். காதல், திருமணம் உள்பட எனது வாழ்க்கையின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், எனது வாழ்க்கையின் மகத்துவமான காதலைக் கண்டடைந்த ‘நானும் ரௌடி தான்’ என்ற படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது. ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், போட்டோக்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக 2 வருடங்கள் காத்திருந்தோம். எங்களது எல்லா போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவை கைவிட்டு ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.
‘நானும் ரௌடி தான்’ படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணம், இதயத்தில் இருந்து எழுதப்பட்ட அதன் வரிகள். ஆனால், அந்த வரிகளைக்கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக்கூடாது என்பது எந்தளவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களை தவிர மற்ற அனைவருக்கும் புரியும். தடையில்லா சான்றிதழ் மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால், நிச்சயமாக அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 3 விநாடி வீடியோவுக்கு எதிராக லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு 10,00,00,000 (பத்து கோடி ரூபாய்) நஷ்டஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமாக இருக்கிறது.
கீழ்த்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன்பு பேசுவதைப்போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம். எனது திரைப்பயணத்தின் இனிமையான நினைவுகளைக் கொண்ட பல்வேறு காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன. அதற்கான அனுமதிக்காக வேறு பல தயாரிப்பாளர்களை அணுகியபோது, பேரன்புடன் அனுமதித்தனர். அப்போதுதான், உங்களில் இருந்து எவ்வளவு மாறுபட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால்தான், காலங்களைக் கடந்தும் கொண்டாடப்படுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
சட்டப்பூர்வமான உங்களது நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நாங்களும் தயாராகவே இருக்கிறோம். ‘நானும் ரௌடி தான் படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான காப்பிரைட் காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக்கொள்ளுங்கள் ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. ‘நானும் ரௌடி தான்’ வெளியாகி 10 ஆண்டுகளைக் கடந்த பிறகும் கூட, உங்களது இழிவான செயல்களை மறைக்கும் வகையிலான, போலியான முகமூடியை அணிந்துகொண்டு உங்களால் வலம் வர முடியும். ஆனால், தயாரிப்பாளராக பெரும் வெற்றியைக் கொடுத்த, ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு படத்துக்கு எதிரான உங்களது கொடும்சொற்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. அதனால் ஏற்பட்ட காயமும் என்றென்றும் ஆறாது. அந்தப் படத்தின் வெற்றி, உங்களை உளவியல் ரீதியாக வெகுவாக பாதித்ததை சினிமா நண்பர்கள் மூலமாக தெரிந்துகொண்டேன்.
பிறகு சினிமா விழாக்களில் நீங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய விதம், சாதாரண பார்வையாளர்களுக்கும் அதை நன்றாகவே புரியவைத்தது. எந்தவொரு துறையிலும் வியாபார ரீதியான போட்டிகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், எந்தக்காரணத்தைக் கொண்டும் ஒருவர் இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட முடியாது, அநாகரீகமான அந்த செயல்களைச் செய்வது உங்களைப் போன்ற பிரபலமான நடிகரே ஆனாலும், தமிழ்நாட்டு மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடந்த காலத்தில் உங்களுடன் பயணித்தவர்களின் வெற்றியை, எந்தவொரு கோபமும் இல்லாமல் சமாதானத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்தக் கடிதத்தின் மூலம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இந்த உலகம் எல்லோருக்குமானது.
கடின உழைப்பால், கடவுளின் ஆசீர்வாதத்தால், மக்களின் பேரன்பால், சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாத ஒருவரும் இங்கு வெற்றிபெறுவதும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதும் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது. அடுத்த இசை வெளியீட்டு விழாவில், இது எதுவுமே நடக்கவில்லை என்று மறுத்து, கற்பனையாக சில கதைகளைப் புனைந்து, அதையே உண்மையைப்போல் நீங்கள் சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், அதை கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த நேரத்தில் ஜெர்மானிய மொழியின் Schadenfreude (மற்றவருக்கு ஏற்படும் கெடுதலில் இன்பம் காண்பது) என்ற வார்த்தையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அதன் அர்த்தத்தை தெரிந்துகொண்டு, இனி யாருக்கும் அதைச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ‘மகிழ்வித்து மகிழ்’ என்பதே உண்மையான மகிழ்ச்சி.
கொண்ட்டாட்டங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையை எல்லோரும் புன்னகையுடன் கடக்க வேண்டும் என்பதையே எனது குறிக்கோளாகக் கொண்டிருக்கிறேன். அதை அடிப்படையாகக்கொண்டே ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதை ஒருமுறை பார்த்தால், உங்கள் எண்ணங்களும் நேர்மறையாக நிச்சயம் மாறும். எல்லா மேடைகளிலும் நீங்கள் சொல்லும் Spread Love என்பதை வெற்று வார்த்தைகளாய் மட்டுமின்றி, ஒரே ஒருமுறையாவது வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று, இனி நானும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.