உழைக்க விரும்பாத கவின், தினமும் வேஷம் போட்டு, பொய் சொல்லி நடித்து, மக்களிடம் பிச்சை எடுத்து, அதில் பீட்சா சாப்பிட்டு ஜாலியாக இருக்கிறார். அவரை நம்பி ஒரு சிறுவன். அவனுக்கு உழைக்கப் பிடிக்கும். சிக்னலில் புத்தகம் விற்பதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் புளியோதரை சாப்பிடுவான். இந்நிலையில், ஆடம்பர மாளிகையில் அன்னதானம் சாப்பிடச் சென்று, அன்றிரவு அங்கேயே திருட்டுத்தனமாக தங்கும் கவின், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறார். அந்த மாளிகையில் சொத்துகளைப் பிரித்துக்கொள்ள வரும் வாரிசுகளிடம் சிக்கி அவஸ்தைப்படும் கவின், அந்த சொத்துகளுக்கு இன்னொரு வாரிசாக நடிக்க சம்மதிக்க வைக்கப்படுகிறார். அவரும் நடிக்க, பிறகு அவரது பிளாஷ்பேக்கை நடப்பு சம்பவங்களுடன் திரைக்கதை இணைக்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
ஜாலியாகப் பிச்சை எடுக்கும் காட்சிகளில் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கவின், மாளிகையில் சிக்கித் தவிக்கும்போது நவரச நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிறுவன் யார் என்ற சஸ்பென்சை உடைத்து அவர் கண் கலங்குவது உருக வைக்கிறது. சொத்துகளைப் பங்கு பிரிக்க பேராசைப்படும் ஒவ்வொருவரும் ஒரு ரகம். ராதாரவி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நாசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபாந்துலா, ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், யு.சரவணன் ஆகியோர், அந்தந்த கேரக்டராகவே மாறி புகுந்து விளையாடி இருக்கின்றனர். பேயாக வந்து லந்து செய்யும் ரெடின் கிங்ஸ்லியின் காமெடி பன்ச் கலகலக்க வைக்கிறது.
பிரமாண்ட மாளிகையும் ஒரு கேரக்டராக மாறி நடித்துள்ளது. ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், கலை இயக்குனர் மணிமொழியன் ராமதுரை, எடிட்டர் நிர்மல், இசை அமைப்பாளர் ஜென் மார்ட்டின் கூட்டணி, படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. டார்க் ஹியூமர் கதையை விறுவிறுப்பாக அளிக்க முயற்சித்த இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார், ஆங்கிலப் படங்களின் பாணியில் ெகாடுத்திருப்பது அந்நியமாக்கி விடுகிறது. ஏகப்பட்ட கேரக்டர்கள் குவிந்திருப்பது சோர்வை ஏற்படுத்துகிறது. ஆங்காங்கே சுவாரஸ்யம் குறைந்து, முழு படமும் வசனங்களாலேயே நகர்கிறது. இதனால், யாசகன் ஏற்படுத்த நினைத்த தாக்கத்தை முழுமையாக உணர முடியவில்லை.