எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?

கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம். வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம் என மறை நூலில் எழுதப்பட்டுள்ளது அன்றோ? ஆயினும் நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றி மேல் வெற்றி அடைகிறோம். ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வளமிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்போ நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.’’  (உரோமையர் 8: 3539)

இல்லறத்தில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த அந்த முதிய தம்பதியினர் ஒரு தினத்தில் ஒன்றாகவே இறந்துபோயினர். இருவரும் சொர்க்கத்துக்குப் போய்ச் சேர்ந்தனர். அங்கே இருந்தவர்கள் அங்கிருந்த பெரிய மாளிகை ஒன்றை இவர்கள் தங்குவதற்காக ஒதுக்கிக் கொடுத்தனர். எந்தக்குறையுமில்லாமல் எல்லா வசதிகளும் நிறைவுடன் இருந்தன. தாத்தா மாளிகையை ஆர்வமுடன் சுற்றிப்பார்த்தார். மிகவும் பிடித்திருந்தது. ‘‘இதுக்கு எவ்வளவு வாடகை?’’ என்று கேட்டார். ‘‘வாடகை கிடையாது இலவசம்’’ என்றனர். ஓ! இலவசமா? என்று ஆச்சரியப்பட்டார். பக்கத்திலேயே பிரமாண்டமான கட்டிடம் ஒன்று தெரிந்தது. அது என்ன கட்டிடம் என்று கேட்டார் தாத்தா.

ஓ! அதுவா? அது உணவு விடுதி! தாத்தாவையும், பாட்டியையும் அங்கே அழைத்துச் சென்றனர். விதவிதமான உணவு வகைகள் இருந்தன. அவரவர் விருப்பப்படி எடுத்துச் சாப்பிடலாம். இதற்கெல்லாம் எவ்வளவு கட்டணம்? அதுதான் சொன்னோமே! இங்கே எல்லாம் இலவசம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்! நீங்க சொல்றீங்க சரி! நான் சர்க்கரை, உப்பு, சேர்க்கக் கூடாது! பாட்டி எனக்கு பத்தியச்சாப்பாடுதான் தருவா. ரொம்ப கண்டிப்பா இருப்பா. இதோ, பாருங்க. இங்கே உங்களுக்கு அந்தக்கவலை தேவையில்லை. நீங்க இங்கே இனிப்பு, காரம், உப்பு, புளி, எது வேணுமானாலும் சாப்பிடலாம்.

உங்களுக்கு எந்த நோயும் வராது. இதைக்கேட்டதும், அந்தத் தாத்தா, தன் பக்கத்தில் நின்றிருந்த பாட்டியைப் பார்த்து, பயங்கரமாக முறைத்துப் பார்த்தபடி கத்தினார். ‘‘அடிப்பாவி! எல்லாத்தையும் கெடுத்திட்டியே! நீ எனக்குப் பத்தியச் சாப்பாடு போடாம கண்டதையும் தின்ன விட்டிருந்தால் பத்து வருடத்துக்கு முன்னாடியே நான் இங்கே வந்து சேர்ந்திருப்பேனே?’’இது வேடிக்கையாக இருந்தாலும் இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்று உண்டு. சொர்க்கம் நரகம் என்று ஆன்மிகம் குறிப்பிடுவது, வேறு எங்கேயோ இருக்கிற உலகங்களை அல்ல, நாம் மகிழ்ச்சியாக இருந்தால் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்று பொருள். நாம் கவலையாக இருந்தால் நரகத்தில் வாழ்கிறோம் என்று பொருள். ஆகவே, அந்த சொர்க்கம் நரகம் ஆகிய இரண்டும் இருக்கும் இடத்திற்கு ஒரு பெயர் உண்டு. அந்தப் பெயர்தான் ‘மனம்.’

‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: