பொங்கலன்று போர்வை அலங்காரம்

நூற்றியெட்டு போர்வைகளை ஒரே நாளில் அலங்காரமாகச் செய்து அழகுபடுத்தும் ஒரே தலம். ஸ்ரீவைகுண்டம்தான். வாருங்கள் தரிசிப்போம்.  தூத்துக்குடி மாவட்டத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. 108 திவ்ய தேசங்களில், ஒன்பது, கோயில்கள் அருகருகே அமைந்திருப்பது இந்த மாவட்டத்தில் தான். இவற்றை  நவ திருப்பதிகள் என்றழைக்கிறார்கள். அந்த நவ திருப்பதிகளில் முதலாவது திருவைகுண்டம். வைகுண்டத்திலிருந்து பெருமாள் பூலோகத்திற்கு இறங்கி வந்ததால், அவர் கோயில் கொண்ட தலம் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்பட்டது.  பிரம்மன் தன்னிடமிருந்த கெண்டி என்னும் கலசத்தால் தாமிரபரணி தீர்த்தத்தை எடுத்து பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தார். அப்படி அவர் நீர் எடுத்த ஆற்றுப் பகுதி இன்றும் ‘கலச தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.      

 முன்னொரு காலத்தில் வாழ்ந்து வந்த காலதூஷகன் என்ற திருடன், தான் திருடச்செல்லும் முன்பு ஸ்ரீவைகுண்டம் வைகுண்ட நாதனை தினமும் தரிசித்து விட்டுத்தான் திருடச் செல்வான். அதுமட்டுமல்லாமல் தான் திருடிய பொருட்களில் ஒரு பங்கை இப்பெருமானுக்கு அளித்து, தன் தொழிலில் அவரை ஒரு பாகஸ்தராகவும் ஆக்கிவிட்டான்! தனக்கு ஒதுக்கிக்கொண்ட பங்கில் ஒரு பகுதியை அவன் தர்மத்திற்கும் செலவு செய்வான். மிகுந்தவை அவனுடைய சொந்த செலவுகளுக்குப் பயன்படும். பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல வைகுண்ட நாதனுக்கு பங்கு கொடுத்த காலதூஷகன் அரசப் படையிடம் அகப்பட்டுக் கொண்டான். அவன் மானசீகமாக வைகுண்டநாதனின் காலில் விழுந்து அழுதான்.

‘நான் கொள்ளையடித்த பொருட்களில் ஒரு பகுதியை உனக்குத் தந்திருக்கிறேன். ஆகவே, இந்த இக்கட்டிலிருந்து நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்,’ என்று இறைஞ்சினான். அந்தக் கள்வனிடம் பாசம் கொண்ட வைகுண்ட நாதன், அவனைக் காப்பாற்றத் திருவுளம் கொண்டார். தானே காலதூஷகனாக உருமாறி, அரசரிடம் சரணடைந்தார். விசாரணையில் தான் திருடியதை ஒப்புக்கொண்டு, அதற்கான தண்டனையை ஏற்பதாகவும் கூறினார். அவருக்கு ஆயிரம் சாட்டையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டன.

தண்டனை நிறைவேறும்போது,  திருடனாக வந்த வைகுண்ட நாதனின் மீது விழுந்த ஒவ்வொரு அடியும், உலகத்தில் உள்ள அத்தனை ஜீவராசிகள் மீதும் விழுந்தது. தான் அளித்த தண்டனை தன்மீதும் விழுவதை உணர்ந்த அரசன், தன்முன் நின்றிருப்பது கள்வனல்ல, கடவுள் என்றறிந்து அவர் காலில் விழுந்து வணங்கினான். ‘தன் குடிமக்களைக் காப்பதற்காக ஓர் அரசன், அரசாங்கச் செல்வங்களை செலவிட வேண்டும். ஆனால் நீ மக்களுக்காக எதுவும் பெரிதாகச் செய்துவிடவில்லை.

அதனாலேயே நாட்டில் திருட்டு அதிகரித்து விட்டது. உன்னுடைய நிர்வாகக் குறைபாட்டினை உனக்கு உணர்த்தவும், மக்கள் வருந்தும் அளவுக்கு திருட்டுகள் பெருகிவிட்டதைச் சுட்டிக் காட்டவும் நான் திருடனாக வந்தேன்,’ என்றார். அதோடு, ‘காலதூஷகன் முற்பிறவியில் பற்றற்ற யோகியாக வாழ்ந்தவன். ஆனால் தான் பெற்ற சாபம் காரணமாகவே இந்த ஜன்மத்தில் அவன் ஒரு திருடனாக வாழ்கிறான். அவன், தற்போது என்னை அடைந்து சாபவிமோசனம் பெற்றான்’ என்றும் விளக்கிய வைகுண்டவாசன், அரசனுக்கும் காலதூஷகனுக்கும் காட்சி தந்து அருளினார்.

கள்வனிடம் நட்பு வைத்திருந்த காரணத்தினாலும், கள்வனை காப்பாற்ற தானே கள்வனாய் வந்ததாலும் வைகுண்டநாதன், கள்ளர் பிரான் என்று பெயர் பெற்றார். இந்தக் கள்ளபிரான் இந்தக் கோயிலில் உற்சவ மூர்த்தியாய் அருள்கிறார். இங்கே மூலவருக்கு தினமும் பால் அபிஷேகம் நடைபெறுகிறது. 108 திவ்ய தேசங்களில் தினமும் பால் அபிஷேகம் பெரும் ஒரே பெருமாள் இவர்தான் என்கிறார்கள். வைகுண்டபதி மூலவராக இருந்து அருட்பாலிக்கிறார். இருபுறமும் தனித்தனி சந்நதிகளில்  வைகுண்டநாத நாயகி மற்றும் சோரநாத நாயகி இருவரும் கொலுவீற்றிருக்கிறார்கள்.

திருமணத் தடை ஏற்பட்டு மனவேதனையுறும் பெண்கள் 21 நாள் இக்கோயில் தீர்த்தத்தில் நீராடி, பகவானை உளமாற வழிபட்டால், திருமணத் தடை நீங்கும். நீதி மன்ற வழக்குகள் சாதகமாகத் தீரும்.  பொங்கலன்று கள்ளபிரானுக்கு 108 போர்வைகள் போர்த்தி அலங்கரிப்பார்கள். பெருமாள் கொடிமரத்தை வலம் வந்த பின் ஒவ்வொரு போர்வையாக அகற்றி அலங்காரத்தைக் கலைப்பார்கள். இது 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களையும் கள்ளபிரான் வடிவில் தரிசிப்பதாக ஐதீகம்.இந்த கோயிலில் சந்தன கருடன் மிகவும் விசேஷமானவர். இவரை வணங்கி வலம் வந்தால், கண் வலி, கால்வலி உபாதைகள் தீரும் என்கிறார்கள். ஆலயத்தின் தலவிருட்சம் பவள மல்லி . நெல்லை - திருச்செந்தூர் சாலையில் 23 வது கி.மீட்டரில் புதுக்குடி என்னும் இடத்தில் இறங்கி இடது புறம் ஆற்றுபாலம் வழியாக சென்றால் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலை அடையலாம்.

Related Stories: