பழைய தீய எண்ணங்கள் மறைந்து புதிய நல்ல எண்ணங்களை வளர்க்கும் போகிப் பண்டிகை

மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பழைய பொருட்களை தீயிட்டு எரித்து, போகி பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர். நெடுங்காலமாக இந்த போகி திருநாளில் பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. போகி பண்டிகையோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு. மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன. மழை பெய்தால் தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை போகியன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது.

போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய குப்பைகள், தேவையில்லாத பழைய பொருட்கள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். போகி தினத்தன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பிடித்த உணவை படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து தீப ஆராதனை செய்வது வழக்கத்தில் உள்ளது. போகிப்பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும். பழைய தீய எண்ணங்கள் மறைந்து புதிய நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Related Stories: