சேலம் சம்மோஹனப் பெருமாள்

ஸ்ரீமகாவிஷ்ணு வைகுண்டத்தில் மகாலட்சுமியுடன் பேசிக் கொண்டு தனக்கு மரியாதை செய்யாததால் கோபம் கொண்ட பிருகு முனிவர், ஸ்ரீமகாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைக்க தாயார் கோபித்துக் கொண்டு சென்றுவிட, ஸ்ரீவிஷ்ணு, பிருகு முனிவரின் பாதத்தில் இருந்த ஞானக்கண்ணை பறித்து அவரை சக்தி இழக்கச் செய்தார். தவறை உணர்ந்த முனிவர் தம்மை மன்னிக்கும்படி வேண்ட, தாயாரை நினைத்து தவம் இருந்ததால் தவறு மன்னிக்கப்படும் என ஸ்ரீவிஷ்ணு அறிவுரை கூறினார். அதன்படி முனிவர் இத்தலத்தில் வில்வ மரத்தடியில் தவம் இருந்தார். வில்வ மரத்தடியில் அழகிய பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருப்பதைக் கண்டு, குழந்தைக்கு யாரும் உறவு இல்லை என்று தன்னுடன் அழைத்துச் சென்று ‘‘சுந்தரவல்லி’’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.

பின்பு தன்னால் வளர்க்கப்பட்டு வரும் குழந்தை மகாலட்சுமி என்று உணர்ந்து அவளை மணம் முடிக்கும் உரிமை பெருமாளுக்கு மட்டுமே உள்ளது என்று ஸ்ரீவிஷ்ணுவை வேண்ட பெருமாள் ‘‘அழகிய நாதராக’’ வந்து தாயாரை இத்தலத்தில் மணந்து திருமணக்காட்சி கொடுத்து அருளினார். அவரின் வேண்டுகோளின்படி இருவரும் இத்தலத்தில் தங்கி விட்டனர். ஸ்ரீ என்ற மகாலட்சுமி குழந்தையாக பிறந்த தலம் என்பதால் ‘‘ஸ்ரீசைலம்’’ எனப்பட்ட இவ்வூர், மருவி பிற்காலத்தில் ‘‘சேலம்’’ என அழைக்கப்பட்டு வருகிறது. இத்தலத்தில் அழகியநாதரின் அழகைக் கண்ட ஆஞ்சநேயர் மெய்மறந்து விட்டார். சுவாமிக்கு எதிரே 8 அடி உயரத்தில் பக்த ஆஞ்சநேயராக தனி சந்நதியில் அருள்பாலிக்கிறார்.

பிரம்ம பட்டம் பெறுவதற்காக ஆஞ்சநேயர் இவ்விடத்தில் பெருமாளை வணங்கியதாகவும் ஒரு புராணச் செய்தி கூறுகிறது. இத்தல விமானத்தில் ஆண் உருவமும், பெண் உருவமும் கலந்த சம்மோஹனப் பெருமான் சுதை சிற்பமும், ஆதிசேஷன் மீது அமர்ந்துள்ள நரசிம்மரை சுமக்கும் கருடாழ்வார்  என்ற அழகிய சுதை சிற்பங்களைக் காணலாம். வேறு எந்த வைணவ திருத்தலங்களிலும் இது போன்ற சிற்பங்களை காணக் கிடைக்காதது! சுவாமிக்கு வலப்புறம் தாயார் யோக பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். ஆதியில் இத்தலத்தில் இருந்த வேணுகோபாலர் தனிச்சந்நதியில் உள்ளார். மூலவர் அழகியநாதர் எதிரே கருடன், கொடிக்கம்பம் ஆஞ்சநேயர் சந்நதிகள் வரிசையாக அமைந்துள்ளது சிறப்பாகும். சிறந்த பிரார்த்தனை தலமாக உள்ளது!

 

பவித்ரா

Related Stories: