நன்றி குங்குமம் தோழி
முன்னே கசந்து பின்னே இனிக்கும் முதுநெல்லி!
பெரிய நெல்லி எனும் மலை நெல்லிக்காயை உண்ட பிறகு, தண்ணீரைக் குடித்தால் நாவினிக்கும் என்பதற்காகவே சட்டைப் பாக்கெட்டுகளில் நெல்லியை சேமித்து வைத்து, சிறிது சிறிதாய் சுவைத்த பால்ய கால நினைவுகளுடன், இன்றைய இயற்கை பதிவிற்குள் செல்வோம்.‘‘மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்..!” என்பது அனைவருக்கும் பரிச்சயமான பழமொழி. வயதில் முதிர்ந்த மூத்தோர் கூறும் அறிவுரைகள் முதலில் கசந்தாலும், அதனைக் கேட்டு நடந்தால், முடிவில் இன்பமே விளையும் எனப் பொருள்படும் இந்தப் பழமொழிக்கு உவமையாக நிற்பது நமது அதியமான், அவ்வையின் முதுநெல்லிக்காய்தான்!
முதுநெல்லிக்காயின் தாவரப்பெயர் Phyllanthus embilica. பொதுப்பெயர் Indian Gooseberry. தோன்றிய இடம் இந்தியா. ஆம்லா, ஆம்லகி, ஆம்லகம், நெல்லிக்காய், உசிரிக்காயா, ஆன்லா என நம் நாட்டில் பற்பல பெயர்களில் அழைக்கப்படுவது போலவே, எம்பிலிக், மிரோபலா, கிம்லாக்கா, பலாக்கா, மலாக்கா என தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. கோரங்கம், மிருதுபாலா, ராஜகனி, தாத்ரீ என இலக்கியப் பெயர்களும் நெல்லிக்கு உண்டு. பெயரில் இத்தனை விந்தைகளை சேர்த்திருப்பது போல, சுவையிலும், தனது தனித்துவ குணத்திலும் பற்பல விந்தைகளை உள்ளடக்கியது நெல்லி.
நெல்லியை உண்ணும்போது துவர்ப்பு, புளிப்பு, கசப்பு சுவைகளை ஒருங்கே தந்து, பின்னர் இனிப்புச் சுவையினைத் தரும் இந்தக் கனி, பச்சை மற்றும் மஞ்சள், இளஞ் சிவப்பு, பழுப்பு நிறங்களில் காணப்படுகிறது. இதில் நாட்டுநெல்லி எனப்படுகிற அரைநெல்லிக்காயாகிய சிறிய நெல்லி, முற்றிலும் வேறு தாவரம் என்பதையும் இங்கு நாம் நினைவில் கொள்வோம்.ஏழைகளின் ஆப்பிள் எனப்படுகிற முதுநெல்லியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன எனக் கூறும் ஊட்டச்சத்து நிபுணர்கள், அவற்றின் ஊட்ட அளவுகளையும் எடுத்துரைக்கின்றனர். குறைந்த கலோரி, அதிக நீர்த்தன்மை, அதிக நார்ச்சத்து, அதிக அளவிலான வைட்டமின்கள் மற்றும் ஒமேகா 3, 6 கொழுப்பு அமிலங்கள் நெல்லியில் நிறைந்துள்ளன.
‘One Man Army’ என சிலேடையாய் அழைக்கப்படும் நெல்லியில் எலுமிச்சை, ஆரஞ்சுப் பழங்களைக் காட்டிலும் அதிகளவு வைட்டமின் C இருப்பதோடு, வைட்டமின்கள் A, B காம்ப்ளக்ஸ் மற்றும் E இவற்றோடு, பொட்டாசியம், கால்சியம், குரோமியம், செலினியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ் நிறைந்துள்ளது. மேலும், உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களான குளூட்டமேட், ஆஸ்பார்டேட், சிஸ்டின், லைசின், ஆர்ஜினைன் மற்றும் தாவரச்சத்துகளான பெக்டின், ஃபில்லான்டின், ஃபில்லெம்பீன், ஜெரானின், டானின், கெம்ப்ரால், குவர்செட்டின், காலிக் அமிலம் போன்றவை இதன் மருத்துவ குணங்களுக்குக் காரணமாக இருக்கின்றன என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
‘‘A Gooseberry Day, keeps diseases away” எனும் அளவுக்கு முதுநெல்லியின் மருத்துவ குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், உடல் பருமன் போன்றவற்றைக் கட்டுக்குள் வைப்பதுடன், இதய நோய், பக்கவாதம் போன்றவற்றுக்கு, வருமுன் காக்கும் மூலிகைக் கனியாகவும் இருக்கிறது. உமிழ்நீர் சுரப்பை பெருக்கி, தாகத்தைத் தணித்து, செரிமானத்தைக் கூட்டி, பசியின்மையைப் போக்கும் இதன் சத்துகள், வயிற்று அழற்சி, வாய்ப்புண், குடல் நோய்கள், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் ஏற்படும் போது பெரிதும் பயனளிக்கிறது.
நெல்லியிலிருக்கும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், நோய்த் தடுப்பு ஆற்றலைத் தருவதுடன், ரத்த சோகை, ஒற்றைத் தலைவலி, ஞாபக மறதி, மன அழுத்தம், தூக்கமின்மை, நரம்புத் தளர்ச்சியினைக் குணப்படுத்துவதுடன், இதில் உள்ள அதிக அளவிலான வைட்டமின் சி மற்றும் ஏ சத்துகள், கண் நோய்கள், சரும ஆரோக்கியம், முடி வளர்ச்சி, பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. மேலும், ஆஸ்துமா, அலர்ஜி, நாள்பட்ட நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்களின் தாக்கத்தைக் குறைத்து, தசைப்பிடிப்பு மற்றும் மூட்டு வலிகளைக் குறைக்கவும் துணை நிற்கின்றன.
வளர்கிற குழந்தைகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் சிறந்த உணவுத் தேர்வாய், தண்ணீர் பாட்டிலில் தினம் ஒரு நெல்லிக்காய் சேர்ப்பது தாகத்தைக் குறைப்பதுடன், எளிதில் வைட்டமின்களை கடத்தும் வழிமுறை என்கின்றனர் ஊட்டவியல் நிபுணர்கள்.பெண்களின் கர்ப்ப காலத்திலும், மாதவிடாயின் போது ஏற்படும் வலி அல்லது அதிகப்படியான உதிரப்போக்கு, பிசிஓடி பிரச்னைகளை மட்டுப்படுத்துவதுடன், கல்லீரல், பெருங்குடல், கர்ப்பப்பை, சினைப்பை மற்றும் புற்று நோய்களின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மதுப்பழக்கத்தால் தோன்றும் கல்லீரல் பாதிப்பு, காமாலை நோய், கதிர் வீச்சால் தோன்றும் பக்கவிளைவுகளையும் குறைக்கிறது.
அதிகளவில் நெல்லியை உட்கொள்ளும் போது சிலருக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி, உடல் எடைக்குறை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்றாலும், நெல்லிக்காயால் தொண்டை கரகரப்பு, சளி தொந்தரவு உண்டாகும் என்பது உண்மையல்ல. சளிக்கான மருத்துவ நிவாரணி நெல்லி என்பதே உண்மை என்கின்றனர் மருத்துவர்கள்.நெல்லிக்கனி மட்டுமல்லாது அதன் விதைகள், இலைகள், வேர்கள் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
டானின்கள் அதிகம் நிறைந்த இதன் இளந்தளிர்கள் மற்றும் தழைகள் மருந்தாகவும், இயற்கை நிறமியாகவும் நமக்குப் பயன்படுகின்றன என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள். அனைத்திற்கும் மேலாக, நீண்ட ஆயுளுக்கான அற்புத நெல்லிக்கனி ஒன்றை, அதியமானுக்கு ஔவை பரிசளிக்க, அதனைத் தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட ஔவைக்கு ஈந்து, தமிழுக்குப் பெருமை சேர்த்த வரலாறு செறிந்தது நமது தமிழ்நாடு.
பெரிய மரத்தில் சிறிய இலைகளுக்கு நடுவே கொத்துக் கொத்தாக காய்க்கும் நெல்லிக்காய்கள் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், சீனா, இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட வெப்ப மண்டல நாடுகளிலும் அதிகம் விளைகின்றன. உலகளவில் முதுநெல்லி அதிகம் உற்பத்தி ஆனாலும், நமது நாட்டில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் அதிகம் விளைகிறது. அதிக சக்தி வாய்ந்த முதுநெல்லியை, ‘The Ultimate Super Food’ எனக் கொண்டாடும்
அமெரிக்க மற்றும் கனடா நாட்டவர், நம்மிடமிருந்து அதிகளவில் நெல்லியை இறக்குமதி செய்கின்றனர்.
ஆரவல்லி மற்றும் விந்தியமலைத் தொடர்களில், ஏற்றுமதிக்கான வேளாண்மைப் பயிராகப் பயிரிடப்படும் இந்த மூலிகைத் தாவரம், அதன் அருமையான குணங்களுக்காக, நாடெங்கிலும் தோட்டங்களிலும், வீடுகளிலும் வைத்து வளர்க்கப்படுகிறது. மண்வளம், நீர்வளம், சூரிய ஒளி இவற்றில் செழித்து வளர்ந்து, குறைந்தது மூன்று முதல் ஐந்து வருடங்களில் காய்க்கவும் செய்கிறது. காய்ப்புக்கு வந்தபின் ஒவ்வொரு மரமும் 5 முதல் 80 கிலோ வரை மகசூலை அளிக்கிறது.
ஒட்டுப் பதியன்களாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடவு செய்யப்படும் மலை நெல்லி, வருடத்திற்கு இருமுறை, பிப்ரவரி, ஜூலை மாதங்களில் காய்ப்பதுடன், வருடம் முழுவதுமே காய்க்கும் வகைகளும் இதில் இருக்கின்றன. நெல்லியை பறித்ததும் அப்படியே சாப்பிடலாம் அல்லது பள்ளிப் பருவத்தில் உண்டது போல் உப்பு, மிளகாய்த்தூள் இணைத்தும் சுவைக்கலாம். அல்லது ஜூஸ், சட்னி, ஊறுகாய் என பல்வேறு விதமாகவும் உட்கொள்ளலாம்.
பதப்படுத்தப்பட்ட நெல்லி, நெல்லிப்பொடி, திரிபலா, சியவன்ப்ராஷ், லேகியம், கூந்தல் தைலம், அடர் ரசம் (சிரப்), குளிர் பானம், முரஃபா, ஷாம்பு போன்றவை வியாபாரமயமாக்கப்பட்ட நெல்லியின் மறு வடிவங்களாகும்.‘‘நெல்லியால் நெடும் பகை போகும்’’ என்ற பழமொழிக்கேற்ப முதுநெல்லி, நம் உடலின் பல்வேறு நோய்களைப் போக்கும் அருமருந்தாக மட்டுமல்ல… தாய்க்கும் ஒப்பான தன்னிகரில்லா தாவரமாகவும் இருக்கின்றது..!
(இயற்கைப் பயணம் நீளும்!)
டாக்டர் சசித்ரா தாமோதரன்- மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்
The post இயற்கை 360° appeared first on Dinakaran.
