தெளிவு பெறுஓம்

?பெண்களுக்கு “ருது ஜாதகம்’’ (வயது வந்த பெண்ணின் நேரம் வைத்து கணிக்கப்படுவது) என்று ஒன்று எழுதி வைக்கின்றார்கள், அது அவசியம் தானா?
– ராமமூர்த்தி, பண்ரூட்டி.

அவசியமா இல்லையா என்பது அவரவர்கள் குல வழக்கத்தைப் பொறுத்தது. இன்றைக்கும் பல குடும்பங்களில் ருது ஜாதகம் எழுதி வைக்கிறார்கள். ஆனால், ஜன்ம ஜாதகம் பார்த்துதான் பலன்களைச் சரியாக எடுக்க முடியும். நடைமுறை வாழ்க்கையில் ஜன்ம ஜாதகம் போதும்.

?கோயிலுக்குப் போனால் நம் பிரச்னைகள் நிச்சயமாகத் தீருமா?
– செந்தமிழன், சென்னை.

இப்படிச் சந்தேகமாக கேட்டால் எப்படித் தீரும்? நிச்சயமாகத் தீரும் என்கிற நம்பிக்கையிலேதான் ஆயிரக்கணக்கான மக்கள் கோயிலுக்குச் செல்கிறார்கள். தங்கள் பிரச்னைகளை பகவானிடத்தில் சொல்லுகின்றார்கள். குறைந்தபட்சம் அந்தப் பிரச்னையை எதிர்கொள்ளும் தைரியத்தைப் பெறுகிறார்கள். இது சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகின்றேன். ‘‘வேதத்தை நம்பு, அது உன்னைக் காப்பாற்றும்’’ என்று குரு சொல்லிக் கொடுத்தார்.

சீடனும் கற்றுக் கொண்டான். எந்த ஆபத்திலும் வேதம் தன்னைக் காப்பாற்றுமா என்று பரிசோதனை செய்ய முயன்றான். அதற்காக உயரமான ஒரு மரத்தில் ஏறிக்கொண்டு வேதம் சத்தியமானால் என்னைக் காப்பாற்றட்டும்’’ என்று சொல்லிக் குதித்தான். கீழே விழுந்து அடிபட்டான். ஆனால் உயிர் போகவில்லை. குருவிடம் சென்று ‘‘வேதம் ஒருவரை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் என்று சொன்னீர்கள். ஆனால் எனக்கு அடிபட்டு விட்டதே’’ என்று கேட்கும் போது, ‘‘நீ என்ன சொல்லிக் குதித்தாய்?’’ என்று கேட்டார். “வேதம் சத்தியமானால் என்னைக் காப்பாற்றட்டும் என்று சொல்லிக் குதித்தேன்’’ என்றான் சீடன். குரு சொன்னார்.

எப்பொழுது வேதம் சத்தியமானால் என்று உன் வாயில் இருந்து வந்ததோ அப்பொழுதே நீ வேதத்தை முழுமையாக நம்பவில்லை என்பது தெரிகிறது. பிறகு எப்படி உன்னை வேதம் காப்பாற்றும்?

இதேதான் கோயிலுக்குப் போய் வழிபடுவதிலும் உள்ளது. நம்பிக்கை இல்லாமல் கோயிலுக்குப் போவதைவிட அல்லது சோதித்துப் பார்ப்பதற்காக கோயிலுக்குப் போவதைவிட போகாமல் இருப்பதுகூட நல்லதுதான்.

?நந்தனாருக்கு நந்தி விலகியது போல, கருடன் விலகிய பெருமாள் கோயில் உண்டா?
– வாசுதேவ நாராயணன், பரமக்குடி.

ஏன் இல்லாமல்? திருநெல்வேலிக்கு பக்கத்திலே ஆழ்வார் நவ திருப்பதிகளில் ஒன்று தென் திருப்பேரை. நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம், ஆழ்வார் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். தாயாருக்கு: குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார் என்று பெயர்.

சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மகர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உண்டு. ஆழ்வார்களில் நம்மாழ்வார் மட்டும் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்திருக்கிறார். ‘‘வேத ஒலியும் விழா ஒலியும், பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும் அறா திருப்பேரெயில் சேர்வன் நானே!” என்பது ஆழ்வார் பாசுரம். பிள்ளைக் குழாவிளையாட்டொலியுமறா என்றது இத்திருப்பதிக்குச் சிறப்பான தொரு விசேஷணம்.

சிறுபிள்ளைகள் திரண்டு விளையாடுவதென்பது எங்குமுண்டு; இவ்வூரில் அப்பிள்ளைகள் விளையாடுவது கோயில் திருமுன்பே யாயிருக்கும். எம்பெருமான் தானும் அந்த விளையாட்டின் சுவையைக் காண ஆசைப்பட்டானாம். எதிரே பெரியதிருவடி (கருடன்) சன்னிதியிருந்து இடைச் சுவராயிருந்தபடியாலே அந்த விளையாட்டைக்காண மறைவாயிருக்கிறதேயென்று வருந்தி “கருடா! அப்பால் போ” என்று பெருமாள் உரைத்தாராம். கருடனும் சற்று விலகினானாம். இந்த நிலைமை இன்றும் காணலாம்.

?விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பெண்கள் செய்யலாமா?
– ஆர்.மதுமிதா, வியாசர்பாடி – சென்னை.

மகாபாரதத்தின் ஒரு பகுதியாக விஷ்ணு சஹஸ்ரநாமம் வருகிறது. விஷ்ணு சகஸ்ரநாமம் என்பது இறைவனின் ஆயிரம் நாமங்கள். ஆண்டாள் பெரியாழ்வாரின் பெண்பிள்ளை. ஆனாலும் அவள் இறைவனின் திருநாமத்தைப் பாட வேண்டும் என்று சொல்லுகின்றாள். ‘‘தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயில் தூசாகும் செப்பு’’ என்பது அவளுடைய வாக்கு.

பாவங்கள் போவதற்கு பகவானின் நாமங்கள்தான் ஆத்மாவுக்குத் துணை. அதனால் பெண்கள் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்யலாம். பல ஊர்களில் பெண்கள் ஒரு குழுவாக அமைத்துக் கொண்டு விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வருகின்றார்கள். சிதம்பரத்தில் ஒரு பெண் குழந்தை எதையும் பார்க்காமல் 22 நிமிடங்கள் கடகடவென்று விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்கிறது. சிலர் குழுவாக திவ்யதேசங்கள் தோறும் சென்று விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்கின்றார்கள்.

வீடுகளுக்குச் சென்று பாராயணம் செய்து கொடுக்கின்றார்கள். அங்கெல்லாம் மங்களகரமான செயல்கள் நடக்கின்றன. விளைவும் நன்றாக இருக்கிறது. இதற்குமேல் இது பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒரு நல்ல விஷயத்தை செய்ய வைப்பது கடினம். தடுப்பது எளிது. ஏற்கனவே மக்களுக்கு நல்ல விஷயங்கள் எதையாவது செய்ய வைக்க வேண்டும் என்று சொன்னால், மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு வார்த்தை சொன்னால் போதும் ‘‘அடடா, நான் தப்பாகச் செய்து கொண்டிருக்கிறோம் என்று செய்தி வந்தா, நல்ல விஷயங்களை நிறுத்தி விடுவதற்கு தயாராக இருப்பார்கள்.

?கணவர் இறந்து போன பிறகு அவர் செய்து வந்த பூஜையை மனைவி தொடரலாமா?
– பூர்வஜா, மதுரை.

கட்டாயம் தொடரலாம் அது அவருக்கு மகிழ்ச்சியைத் தரும். இதைவிட குடும்பத்துக்கு மங்கலம் தரும் நல்ல செயல் இருக்க முடியாது.

?சில நட்சத்திரங்களுக்கு பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என்று சொல்கிறார்களே? உண்மையா?
– ரேவதி கண்ணன், ஸ்ரீரங்கம்.

பொருத்தமே பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதைகூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், சில நட்சத்திரங்களுக்கு பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம், ஒருவருடைய முழுமையான ஜாதகத்தை நட்சத்திரம் மட்டும் தீர்மானம் செய்வதில்லை. லக்னம், ராசி மற்றும் கிரகங்கள் எல்லாம் சேர்ந்துதான் தீர்மானம் செய்கின்றன. திருமண பொருத்தத்தைப் பார்ப்பதாக இருந்தால், ஒரு நல்ல ஜோசியரிடம் முழுமையாக அலசிப் பார்த்துவிட வேண்டும். இல்லாவிட்டால் பகவான் விட்ட வழி என்று மனப் பொருத்தத்தை அடிப்படையாக வைத்து திருமணம் செய்துவிட வேண்டும். இரண்டையும் போட்டு குழப்பிக் கொண்டால் வாழ்க்கையும் குழப்பமாகிவிடும்.

?யாமுனாச்சாரியார் என்று யாரைச் சொல்கிறார்கள்?
– ராமபிரியா, முசிறி.

வைணவத்தில் ஆளவந்தாரை யாமுனாச்சாரியார் என்று சொல்கின்றார்கள். இவர் ராமானுஜரின் குரு. நாதமுனிகளின் பேரன். நாதமுனிகள் வடக்கே யமுனையில் நீராடிக் கொண்டிருந்த போது, கண்ணனைப் போலவே ஒரு பேரக்குழந்தை பிறக்க வேண்டும், அது வைணவத்தை வளர்க்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். அப்படியே அவர் குமாரனுக்கு குழந்தை பிறந்தவுடன், யமுனைத் துறைவன் என்று பெயர் வைத்தார். அவர் ஆச்சாரியர் பட்டத்துக்கு வந்தவுடன் யமுனைத் துறைவன் என்கிற பெயர் யமுனாச்சாரி யார் என்று மாறியது.

?ஆன்மிகத்துக்கு எது முக்கியம்?
– ஜெயா ராகவேந்திரன், குளித்தலை.

உயிர்களிடத்தில் கொண்ட இரக்க உணர்வுதான் முக்கியம். இது மற்ற உயிரினங்களுக்கு இல்லாதது. உயிர்கள் என்று சொன்னால் மனித உயிர்கள் மட்டுமல்ல. ஒரு சம்பவம் சொல்கிறேன். ஒரு சிறு பையன் தன் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த மருத்துவரை அவசரமாக அழைத்து ‘‘ஐயா, சீக்கிரம் வாருங்கள். ஒரு உயிர் வேதனையால் துடித்துக் கொண்டிருக்கிறது வந்து காப்பாற்றுங்கள் என்று அழைத்து வந்தான். மருத்துவர் வந்து பார்த்தவுடன், அவருக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது. ஏனென்றால் சிறுவன் காட்டியது ஒரு நாயை. அது அடிபட்டு வேதனையால் துடித்துக் கொண்டிருந்தது. ‘‘இதுதான் ரொம்ப அவசரம் என்று கூப்பிட்டாயோ?’’ என்று கோபித்துக் கொண்டார் டாக்டர்.

அப்பொழுது சிறுவன் சொன்னான். ‘‘ஐயா, வேதனை என்றால் மனிதர்களுக்கு மட்டுமல்ல நாய்க்கும் அடிபட்டால் வேதனை தானே இருக்கும். அதை தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? நான் மனிதர்களுக்கு மட்டும்தான் வைத்தியம் பார்ப்பேன் அவர்களுடைய வேதனையை மட்டும்தான் தீர்ப்பேன். மற்ற உயிர்களைப் பற்றிக் கவலை இல்லை என்று சொல்வது என்ன நியாயம்? அது துடிக்கிற துடிப்பைப் பாருங்கள். உங்கள் மனதில் இரக்கம் பிறக்கவில்லையா?’’ என்று அந்த சிறுவன் கேட்டவுடன் அந்த டாக்டர் உடனடியாக அந்த நாய்க்கு மருந்து போட்டார். அப்படிக் கேட்ட சிறுவன்தான் மதன்மோகன் மாணவியா.

உயிர் இரக்கம் இல்லாதவர்கள் ஆன்மிகத் தலைவராகவோ, அரசியல் தலைவர்களாகவும் இருக்க முடியாது. ஏன், மனிதர்களாகவே இருப்பதற்குக்கூட தகுதி குறைந்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். நஞ்சீயரிடம் ஒருவர் கேட்டார். ‘‘ஒருவருக்கு வைஷ்ணவ சித்தி உண்டு என்பதை எப்படித் தெரிந்து கொள்ளலாம்? “அவர் அருமையாக பதில் சொன்னார்.’’ எவன் ஒருவன் உள்ளத்தில் மற்ற உயிர்கள் படும் துன்பத்தைப் பார்த்து ‘‘ஐயோ என்று இரக்கம் பிறக்கிறதோ, அவன் ஒரு வைஷ்ணவன் வைஷ்ணவ உள்ளம் படைத் தவன்.’’ இதைத்தான் “வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’’ என்றார்வள்ளலார்.

?சந்தோஷத்திற்கு என்ன செய்ய வேண்டும்?
– முருகவேல், சேலம்.

நல்லதையே நினைக்க வேண்டும். கெட்டவற்றை மறக்க வேண்டும். நாம் அதற்கு மாறாக கெட்டவற்றை நினைக்கின்றோம் நல்லவற்றை மறக்கின்றோம். பிறகு எப்படி சந்தோஷம் இருக்கும்? இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு நண்பர் நீங்கள் 30 வருடங்களுக்கு முன்னால் எத்தனைச் சொத்துக்களோடு இருந்தீர்கள்? இப்பொழுது அதை எல்லாம் இழந்து விட்டீர்களே.? என்று பெருமையாகப் பேசுவது போல அவருடைய இழப்புகளை எல்லாம் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு நிமிஷம் பார்த்த நண்பர், ‘‘அதையெல்லாம் இப்பொழுது ஞாபகப்படுத்துவதால் நான் இழந்ததைப் பெற்று விடப் போகிறேனா? மகிழ்ச்சியோடு ஒரு தேநீர் பருகலாம் என்று வந்தால், இப்படி பழையது எல்லாம் பேசி என்னுடைய மகிழ்ச்சியைக் கெடுத்து விட்டீர்களே’’ என்று வருத்தப்பட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். நம்மில் பலர் பழைய இழப்புக்களையும் வேதனைகளையும் சதா சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதனால், அந்த நேரத்தின் மகிழ்ச்சியையும் இழப்பார்கள். கோயிலுக்கு வந்தாலும் கல்யாண வீட்டிற்கு வந்தாலும் கூட இப்படி நடந்துகொண்டு மகிழ்ச்சியை இழப்பவர்கள் உண்டு.

?விபூதி தினந்தோறும் அணிய வேண்டுமா?
– சரத்குமார், திருப்பூர்
அதில் என்ன சந்தேகம்?

“மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே’’
– என்று திருஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் என்று பாடி இருக்கிறார். சகலசெல்வங்களையும் தரக்கூடியது திருநீறு. அதில் ஆரோக்கியமும் ஒன்று. பாண்டியனுக்கு உடலில் நோய் ஏற்பட்டபோது திருநீற்றுப் பதிகம் பாடித்தான் ஞானசம்பந்தர் நீக்கினார். எனவே, ஆரோக்கியமும் ஐஸ்வரியமும் விரும்புபவர்கள் தினசரி திருநீறு அணிந்து கொண்டு இறைவனை வழிபடுவது சிறந்தது.

?கடலுக்கும் மனிதப் பிறவிக்கும் சம்பந்தம் உண்டா?
– ஸ்ரீனிவாசன், ஆற்காடு.

மனித வாழ்க்கையையே கடல் என்று கூறுகின்றார்கள் சான்றோர்கள். பிறவிகளை பெருங்கடல் என்று கூறும் வழக்கம் உண்டு. திருவள்ளுவர் பிறவிப் பெருங்கடல் என்று பாடுகின்றார். கடலில் அலைகள் ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கும். வாழ்க்கைக் கடலிலும் ஆசை, வெறுப்பு, துயரம், சந்தோஷம் என பல அலைகள் வந்து கொண்டே இருக்கும். கடலை எளிதில் கடக்க ஒரு படகு வேண்டும். வாழ்க்கை சமுத்திரத்தைக் கடந்து பிறவி இல்லாத நிலையை அடைய இறைவனுடைய திருவடியாகிய படகு வேண்டும். இதைத்தான் திருவள்ளுவரும் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்.

– என்றார்.

தேஜஸ்வி

The post தெளிவு பெறுஓம் appeared first on Dinakaran.

Related Stories: