பாதுகையின் பெருமை

பகுதி 3

பாதுகையின் பெருமையை சொல்ல முடியுமா? என்று ஸ்வாமி தேசிகனே வியந்தார். தன்னால் பாதுகையின் பெருமையை சொல்ல முடியுமா முடியாதா என்ற அச்சம் ஏற்படத்தான் செய்தது. பாதுகா தேவியின் பரம கருணை கிருபா கடாட்சத்தால், அந்த பயம் ஸ்வாமி தேசிகனுக்கு நீங்கியது. பாதுகா தேவியின் பெருமை என்பதை ஸ்வாமி தேசிகனை கொண்டே நமக்கெல்லாம் காட்டி கொடுத்து பெருமை கொண்டிருக்கிறாள் பாதுகா தேவி.

பெருமைகள் பலவற்றிற்கும் உறைவிடமான பாதுகையை எப்போதும் தங்களது தலை மீது சூடி, அதாவது தலையில் படும்படி குனிந்து வாங்கி கொள்ள வேண்டும் என்றே பெரியோர்கள் நினைப்பார்கள். “தநம் மதீயம் தவ பாத பங்கஜம்” என்று ஸ்வாமி ஆளவந்தார் தம்முடைய “ஸ்ரீஸ்தோத்ரரத்நத்தின்” 30வது ஸ்லோகத்தில், எப்பொழுது என்னுடைய தலையை உன்னுடைய திருவடி நிலையானது அலங்கரிக்கப்போகிறது? என்று அருளி இருக்கிறார். தங்கள் தலையை எப்பொழுதும் பாதுகை அலங்கரிக்க வேண்டும் என்பதே திருமால் அடியார்களின் தலையாய பிரார்த்தனை.

“ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின்” முன்றாவது பத்ததியான “பிரபாவ பத்ததியில்’’ 70 ஸ்லோகங்கள் மூலமாக பாதுகையின் பெருமையை பரக்க அருளி இருக்கிறார் ஸ்வாமி தேசிகன். வேதங்களின் உண்மையான கருத்துக்களை உலகுக்கு எடுத்து காட்ட படைக்கட்டப்பட்ட இரு மகாகாவியங்களான “ஸ்ரீமத் ராமாயணமும்”, “ஸ்ரீ மஹாபாரதமும்”, பாதுகையின் பெருமையை நாம் காண்பதற்கு ஏற்ற இரு கண்கள் போல் உள்ளன.

எப்படி என்றால், ராமாயணத்தில், பாதுகைகளை தன் தலையில் சுமந்து அயோத்தி வந்தான் பரதன். உத்தவரோ, மஹாபாரதத்தில், பகவான் கிருஷ்ணரின் பாதுகைகளை தம் தலையில் சுமந்து வந்து பத்ரிகாஷ்ரமம் வந்தடைந்தார். பதினான்கு ஆண்டுகள் ஸ்ரீராமனின் சிம்மாசனத்தில் இவ்வுலகை ஆண்டது ராமரின் பாதுகைகள் தானே? மக்களை பார்த்து காத்தது பாதுகா தானே?

பாதுகையின் பெருமையை அறிந்தது, மாதவனாகிய கிருஷ்ணனின் பாதுகையே! அனைவருக்கும் தாய் போன்றவளே என்று பாதுகையை நோக்கி “மாதர் மாதவ பாதுகே! தவ குணாந் க: ஸ்தோது மஸ்தோகதீ: தாயே உனது குணங்களை, பெருமைகளை முழுவதுமாக உணர்ந்தவர் என்று யாரை தான் குறிப்பிட்டு சொல்ல முடியும்? தேவர்களால்கூட உனது பெருமைகளை முழுதுமாக சொல்லிவிட முடியாதே என சிலாகிக்கும் சுவாமி தேசிகன், “தேவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? உன் நாயகனான ரங்கநாதனை தரிசனம் செய்துவிட வேண்டும் என்று ஆவலோடு வருகின்றனர்.

அதைவிட அதிக ஆவலோடும் ஆர்வத்தோடும் உன்னை தங்கள் தலைகளில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக “நான் முந்தி நீ முந்தி” என்று சப்தம் இட்டபடி பெருமாளின் திருமுன்பே நிற்கின்றனர். அப்போது ஸ்ரீ வைகுண்டத்தின் ஸேனாபதியாகிய ஸ்ரீ விஷ்வக்சேனர் தன் கைப்பிரம்பை அசைத்து, “இதோ இங்கே இருக்க கூடிய நம்பெருமாள் எதற்காக பூலோகம் வந்தான் தெரியுமா? தன் பக்தர்கள் மீது உள்ள அதிகப்படியான அன்பினால்தான். அதனால், அப்படிப்பட்ட பக்தர்களுக்கே பெருமாளது சடாரி என்பது முதலில் வழங்கப்படும் அதற்கு பிறகுதான் உங்களுக்கு என்று சொல்லி கூட்டத்தையும் கட்டுப்படுத்துவாராம் விஷ்வக்சேனர்.

‘‘நம் தலையில் வந்து அமர்ந்து நம் தலை எழுத்தையே நல் எழுத்தாக மாற்றி நமக்கெல்லாம் அனுகிரஹம் செய்கிறாள் பாதுகா தேவி என்று’’

“பரிஸர விநதாநாம் மூர்த்நி துர்வர்ண பங்க்திம்
பரிணமயஸி செளரே: பாதுகே! த்வம் ஸுவர்ணம்
குஹகஜந விதூரே ஸத்பதே லப்த வ்ருத்தே:
க்வ நு கலு விதிதஸ்தே கோப்யஸெள தா துவாத:’’

50வது ஸ்லோகத்தில், “பொதுவாகவே வாழ்க்கையில் நாம் கஷ்டங்களை அனுபவிக்கும் போதெல்லாம்,’’ என் தலைஎழுத்தே சரி இல்லை. இப்படி எல்லாம் நாம் கஷ்டப்படணும்னு அன்னிக்கே பிரம்மா என் தலைல எழுதிட்டார் போலிருக்கு அதான் படாத பாடு பட்டுண்டு இருக்கேன். ஹ்ம்ம் என் தலை எழுத்தை இனி யாரால மாற்றி எழுத முடியும்? என்று சொல்லி கொள்வோம் இல்லையா? எவ்வளவு மோசமான தலை எழுத்தை கொண்டவர்களாக நாம் இருந்தாலும் பாதுகை நம் தலையில் படு போது நம் தலை எழுத்து நிச்சயம் நல்லெழுத்தாக மாறிவிடும் என்று உறுதி அளிக்கிறார் ஸ்வாமி தேசிகன்.

உதாரணத்திற்கு, படிப்பறிவு என்பதே ஒருவனுக்கு வாய்க்காது என்பது அவனது தலை எழுத்தாக இருந்த போதும் விடாமல் அவன் பாதுகையை வணங்கி தம் தலையில் அதை சாற்றிக்கொள்ளும் பாக்கியத்தை பெற்றவனாக மாறிப்போனால், அவன் உலகம் வியக்கும் அறிவாளியாக பாதுகா தேவியின் திருவருளால் மாறி போவான். ரஸவாத வித்தையை புரிகிறாள் பாதுகா தேவி என்றே பாதுகையின் பெருமையை ரசித்து கொண்டாடுகிறார் ஸ்வாமி தேசிகன். சாதாரணமாக உள்ள ஒரு பொருளை அசாதாரணமான தங்கப்பொருளாக மாற்றும் வித்தையைத்தான் ரஸவாத வித்தை என்று வியந்து நாம் சொல்லுவோம்.

சாதாரணமான தலை எழுத்தை கொண்டவர்களின் தலையில் அமர்ந்து கொண்டு அவர்களது எழுத்தையே தங்கமான எழுத்தாக மாற்றிவிடுகிறாள் அல்லவா பாதுகா தேவி? வாழ்க்கையில் துன்பம் ஏற்படும் போதெல்லாம் நாம் நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டிய ஸ்லோகம் இதுதான். திருமாலின் கோயிலுக்கு இடைவிடாமல் சென்று பாதுகா தேவியை நம் தலை மீது வந்து அமர்ந்து நமக்கு அருள் புரிந்து நம் எழுத்தை நல்லெழுத்தாக மாற்றி விடும் படி வேண்டி நிற்போம். நம் தலையில் இருக்கும் துர்வர்ணத்தை சுவர்ணமாக பாதுகையால் மட்டுமேதான் மாற்ற முடியும்.

எல்லையில்லாமல் நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் நீக்கி நம்மை பாவனமாக்கிட வல்லவள் பாதுகா தேவி.ஸ்ரீ சடாரி என்று போற்றப்படும் பாதுகைகளை தங்களது வாழ்க்கையில் ஒரு முறையேனும் தலையில் ஏற்பவர்களை அவர்களது உயிர் என்பது பிரியும் காலத்தில் நித்யசூரிகளால் அழைத்து செல்லப்படுபவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு மீண்டும் சம்ஸார சுழற்சி என்பதே இருக்காது. எமபடர்கள் அவர்களை நெருங்க மாட்டார்கள். திருமாலின் திருவடியில் நம் ஒவ்வொருவரையும் சேர்த்து வைக்கக்கூடிய மிகப்பெரிய உபகாரத்தை, அனுகிரஹத்தை செய்பவள் பாதுகாவே. நமக்குள் நல்லறிவை புகுத்தி, நம்மை திருமாலிடம் கொண்டு போய் சேர்க்கிறாள் பாதுகா.

பரிகலயஸி சேந்மாம் பத்மவாஸா நிஷேவ்யே என்று 58வது ஸ்லோகத்தில், நம்முடைய தலையையும் திருமாலின் திருவடியையும் சேர்த்து வைத்து சந்தோஷம் கொள்கிறாள் பாதுகா. திருமாலின் திருவடியில் நாம் சரணாகதி அடையும் போதுதான் நமக்கு நற்கதி என்பது கிடைக்கும் அல்லவா? திருமாலின் திருவடியிலேயே இருப்பவள் நம் மீது கருணை கொண்டு நம் தலை மீது ஒரு நொடி வந்து அமர்கிறாள்.

நம்மை எல்லாம் தன் திருவருளில் நனைக்கிறாள். பின் நேராக திருமாலின் திருவடிக்கு செல்கிறாள். அங்கே சென்று நம்மை, நம் தலையை அவனிடம் ஒப்படைக்கிறாள். வேத வேதாந்தங்களை கற்றறிந்தவர்கள், தாங்களாகவே சரணாகதி செய்து திருமாலின் திருவடியில் தங்களை சேர்த்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் வேதத்தில் சொல்லி இருக்கக்கூடிய உயர்வான விஷயங்களை பற்றி அறியாத நம் போன்றவர்களுக்கு, தன் திறமையால் நம்மால் அடைய முடியாத திருமாலின் திருவடியையே அடைய வைக்கிறாள் பாதுகா தேவி. சேராததை சேர்த்து வைத்த பெருமை பாதுகைக்கே.

(வளரும்…)

நளினி சம்பத்குமார்

 

The post பாதுகையின் பெருமை appeared first on Dinakaran.

Related Stories: