நீலகிரியில் பெய்த தொடர் மழையால் ஊட்டி நகராட்சி அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

ஊட்டி : நீலகிரியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பெய்த மழையால் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க பயன்படும் முக்கிய அணைகளிலும் தண்ணீர் அளவு உயர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் ஆதரங்கள், அணைகள் மற்றும் குளங்களில் தண்ணீர் அளவு அதிகரிக்கும்.

குறிப்பாக, ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க பயன்படும் அணைகளில் தண்ணீர் அளவு உயர்ந்து விடும். ஆனால், இம்முறை கடந்த ஜூன் மாதம் போதுமான மழை பெய்யாத நிலையில், அனைத்து அணைகளிலும் தண்ணீர் அளவு குறைந்தே காணப்பட்டது.

இந்நிலையில், தென்மேற்கு பருவ காற்று தீவிரமடைந்த நிலையில், கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாள் தோறும் ஓரளவு மழை பெய்து வருகிறது.

இதனால், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் பெரும்பாலான அணைகளில் தண்ணீர் அளவு உயர்ந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால், அனைத்து அணைகளும் நிரம்ப வாய்ப்புள்ளது. மேலும், பார்சன்ஸ்வேலி அணை, ஊட்டி டைகர்ஹில், மார்லிமந்து போன்ற அணைகளிலும் தண்ணீர் அளவு உயர்ந்துள்ளது. இதனால், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.

குறிப்பாக, ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிக்கு தண்ணீர் வழங்க முக்கிய ஆதாரமாக உள்ள பார்சன்ஸ் வேலி அணை பகுதியில் நாள்தோறும் மழை பெய்து வரும் நிலையில் அந்த அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனால், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏதும் இருக்காது. வடகிழக்கு பருவமழை குறித்த சமயத்தில் பெய்தால், அணைகளில் தண்ணீர் அளவு மேலும் உயர வாய்ப்புள்ளது.

தற்போது ஊட்டி நகராட்சிக்குட்பட்பட்ட பெரும்பாலான அணைகளில் போதுமான தண்ணீர் உள்ளதால், ஓரிரு மாதங்களுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நீலகிரியில் பெய்த தொடர் மழையால் ஊட்டி நகராட்சி அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: