மேட்டூர், ஜூலை 28: மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட தகவல் தீயாக பரவியதால், மேட்டூர் அணை உபரிநீர் போக்கி எதிரே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேட்டூர் அணையிலிருந்து நேற்று மாலை, விநாடிக்கு 1லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக செல்லும் தண்ணீர் பீரிட்டு அருவி போல செல்கிறது. பல இடங்களில் நீர் வீழ்ச்சி போல கொட்டும் தண்ணீரிலிருந்து நீர் திவலைகள் பாலத்தின் மீது நின்று வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டத்தின் மீது விழுகிறது.
சில்லென்ற நீர் திவளைகள் விழுவதை மக்கள் ரசித்ததோடு, பாய்ந்து செல்லும் நீரை கண்டு ரசித்தனர். மக்கள் கூட்டம் அதிகமானதால் தின்பண்ட கடைகள், விளையாட்டு பொம்மை, பலூன் கடைகள், பேரிக்காய், அன்னாச்சி பழக்கடைகள் ஏராளமாக போடப்பட்டிருந்தன. மக்கள் கூட்டம் காரணமாக, புதுப்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, புதுப்பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். டூவீலர்கள், பாதசாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இரவு வரை மக்கள் கூட்டம் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. புதுப்பாலம் பகுதி விழாக்கோலம் பூண்டது.
மேட்டூர் அணை உபரிநீர் போக்கியில் அதிகப்படியான வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், இதனை பார்க்கும் ஆர்வத்தில் வெள்ள அபாய எச்சரிக்கையை மீறி ஆண்களும், பெண்களும் ஏராளமாக வெள்ளநீரின் அருகே சென்று வேடிக்கை பார்த்தனர். சிலர் புகைப்படங்களையும், செல்பியும் எடுத்தனர். மேட்டூர் அணை 16 கண் பாலம் முதல் சங்கிலி முனியப்பன் கோயில் வரை உபரிநீர் போக்கியின் இரு கரைகளிலும் ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் வெள்ளத்தின் அருகே சென்றனர். இவர்களை போலீசார் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியாது. வருவாய்த்துறை, நீர்வளத்துறை, தீயணைப்புபடை, காவல்துறை எச்சரிக்கையை மீறி வெள்ளத்தின் அருகே செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மேட்டூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.
