மயிலம் சிங்கனூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு எதிர்ப்பு கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு

மயிலம், ஜூலை 28: திண்டிவனம், மயிலம் அடுத்துள்ள சிங்கனூர் கிராமத்தில் 150 வருடங்கள் பழமையான முத்துமாரியம்மன் கோயிலில் நாகராஜ் என்பவரின் குடும்பத்தினர் பூசாரியாக இருந்து வருகின்றனர். கடந்த 17 வருடங்களாக திருவிழா நடத்துவது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே பிரச்னைகள் இருந்து வந்துள்ளது. இதனால் திருவிழாவை நடத்த முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தியில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலை மறு கட்டமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். இவ்விழாவில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆண்டுதோறும் மாரியம்மன் கோயில் திருவிழா நடத்த வேண்டும் என்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட முறை இரு தரப்பினரிடையே சமாதான கூட்டம் நடந்தது. ஆனால் பிரச்னை தீர்க்கவில்லை.

இதேபோன்று நேற்று முன்தினம் மயிலம் காவல் நிலையத்தில் இரு தரப்பினரையும் அழைத்து மயிலம் போலீசார் சமாதான பேச்சு நடத்தியுள்ளார். இதில் கிராம மக்கள் நலனுக்காக கோயில் திருவிழாவை இரு தரப்பினரும் ஒன்று சேர்ந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் நேற்று காலை திருவிழா நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறவிருந்த நிலையில் திடீரென சம்பவம் இடத்துக்கு வந்த ஒரு தரப்பினர் திருவிழா நடத்த விட மாட்டோம் என்று கூறியுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூடியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் காரணமாக போலீசார் கோயில் வளாகத்தில் அதிரடியாக குவிக்கப்பட்டனர்.

தகவலறிந்த அறநிலையத்துறை துணை ஆணையர் சிவலிங்கம், ஆய்வாளர் தினேஷ், செயல் அலுவலர் ராமலிங்கம் மற்றும் மயிலம் இன்ஸ்பெக்டர் காமராஜ், உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் ஊர் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். மேலும் நாளை (இன்று) இதுகுறித்து இரு தரப்பினரிடையே அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் மீண்டும் ஒரு சமாதான கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பிறகு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post மயிலம் சிங்கனூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு எதிர்ப்பு கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: