கீழக்கரை : கீழக்கரை நகரில் ஜனவரி முதல் தற்போது வரை 400க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.கீழக்கரை நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றிக் கொண்டு திரிகின்றது.
மக்கள் கூடும் இடங்கள், சாலைகளிலும் அதிகளவில் நாய்கள் சுற்றி வரும் நிலையில், நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. நகர்மன்ற கூட்டங்களில் கவுன்சிலர்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி கோரிக்கை வைத்தும் பலனில்லை.
நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்த போதும், அதைப்பற்றி அதிகாரிகள் யாரும் கவனத்தில் கூட கொள்ளவில்லை. இப்படி நாய்களை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காத நிலையில் தான் கீழக்கரை பள்ளிகள் வளாகப்பகுதியில் கூட 15க்கும் மேற்பட்ட நாய்கள் மக்களை விரட்டும் சம்பவம் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றது.நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை மட்டும் கீழக்கரையில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் 20க்கும் மேற்பட்டோரை கடித்து காயப்படுத்தியுள்ளது.
நாய்கடி பாதிப்புக்கு ஆளானவர்கள், கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். இதுமட்டுமின்றி இந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை 400க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் கீழக்கரை பகுதியில் பாதிக்கப்பட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.
கீழக்கரை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றவர்கள் மட்டும் 400க்கும் மேற்பட்டோர். இதுமட்டுமின்றி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அருகில் உள்ள பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுச் சென்று கொண்டு தான் இருக்கின்றனர்.
இப்படியாக நாய்க்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருவது ஒருபுறம் என்றாலும், நாய் கூட்டம் சாலைகளில் சுற்றித் திரிவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பும், உடல் உறுப்புக்களை இழந்தவர்களும் அதிகம் உள்ளனர்.
The post கீழக்கரை நகராட்சியில் நாய் கடியால் 6 மாதங்களில் 400 பேர் பாதிப்பு appeared first on Dinakaran.
