திருச்செந்தூர், ஜூலை 25: தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் தை மாதம் வரும் அமாவாசையானது முக்கிய விரத நாட்களாகும். இந்நாட்களில் இந்துக்கள் நதிக்கரை மற்றும் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கமாகும்.
இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. அமாவாசையை முன்னிட்டு, அதிகாலை முதலே ஏராளமானோர் கடலில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், அதன்பின் சுவாமி தரிசனம் செய்தும் வழிபட்டனர். இதனால்திருக்கோயிலில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
குளத்தூர்: குளத்தூர் அருகே உள்ள சிப்பிகுளம் கடற்கரை சங்குமுக கடற்கரையில் அருப்புக்கோட் டை, புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி, குளத்தூர் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அருகிலுள்ள வைப்பார் கிராமத்தில் உள்ள காசிவிஸ்நாதர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணிகளை குளத்தூர் காவல்நிலைய எஸ்ஐ அந்தோணிதிலிப் தலைமையிலான போலீசார்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குமுக கடற்கரை, தூத்துக்கு துறைமுக கடற்கரை, கோவங்காடு கடற்கரை, ரோச் பூங்கா பகுதி, இனிகோநகர் கடற்பகுதி உள்ளிட்ட இடங்களில் காலையிலே வந்து தங்கள் முன்னோர்களுக்கு அர்ச்சகர்கள் உதவியுடன் தர்ப்பணம் செய்தனர். இதனை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதி, தெற்கு பீச் ரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. ஆடி அமாவாசை என்பதால் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தெப்பக்குளம் அருகே முன்னோர்களுக்கு ஏராளமானோர் தண்ணீர் பாட்டில்களை வாங்கி வந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.
60 அடி உள்வாங்கிய கடல் அமாவாசையையொட்டி நேற்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே அய்யா கோயில் பகுதியில் கடல் சுமார் 60 அடி கடல் உள்வாங்கியது. பாறைகள் வெளியே தெரிந்தன. இருந்தபோதிலும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடினர். இதுபோல் சிலர் பாறைகளில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
The post ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் appeared first on Dinakaran.
