பால் உற்பத்தி அதிகரிப்பு, நோய் தடுப்பு குறித்து ஆவினில் 1500 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

சேலம், ஜூலை 25: சேலம் ஆவினில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், நோய் தடுப்பு முறைகள் குறித்தும் தினமும் 30பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகையில் 1500 பேருக்கு 50 நாட்கள் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தழகத்தில் 30 இடங்களில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளன. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து சேகரிக்கப்படும் பால், ஆவின் பால் பண்ணைகளில் சுத்திகரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியமானது, 800 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. 2.5 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பருவ மழை பெய்து வருவதால், காய்ந்து கிடந்த விவசாயநிலங்கள், தற்போது பசுமையாக புல் வளர்ந்துள்ளது.

இதனால் தற்போது பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. சேலம் ஆவினில் 6.30லட்சம் லிட்டராக பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தினமும் உள்ளுர் தேவைக்கு 2.50லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னைக்கு 2.65 லட்சம் லிட்டர் அனுப்பப்பட்டு வருகிறது. மீதியுள்ள பால், பால் பவுடராக தயாரிக்கப்பட்டும், நெய், இனிப்பு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இதனிடையே, தமிழக முதல்வர், பால்வளத்துறை அமைச்சர் ஆகியோரின் அறிவுரையின் பேரில், பால் உற்பத்தியாளர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில், பால் உற்பத்தியாளர்களுக்கு, தரமான பால் உற்பத்தி, கால்நடைகளுக்கு நோய் தடுப்பு முறைகள், பால் உற்பத்தியை அதிகரிப்பது, மூலிகை மருத்துவ முறை, தீவனம் வழங்கும் முறை உள்ளிட்டவை விளக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது.

சேலம் ஆவினில் தினமும் 30 பால் உற்பத்தியாளர்களுக்கு 50நாட்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு கால்நடை மருத்துவர்கள், ஆவின் அலுவலர்கள் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். இப்பயிற்சி மூலம் பால் உற்பத்தியாளர்கள் தங்களது பால் உற்பத்தியை அதிகரித்து, பொருளாதாரத்தை பெருக்கி கொள்ளலாம். தமிழக அரசின் திட்டங்கள், மானியம், ஊக்கத்தொகை குறித்தும் பால் உற்பத்தியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி மூலம் பால் உற்பத்தியாளர்கள் பால் உற்பத்தியை தரமாகவும், கொள்முதலை அதிகரித்தும், அரசின் திட்டங்கள் மூலம் பல்வேறு சலுகைகள் பெறலாம் என அதிகாரிகள்தெரிவித்தனர்.

இதுகுறித்து சேலம் ஆவின் அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் ஊக்கதொகை அளித்துள்ளார். பால் வளத்துறை அமைச்சர் அறிவுரையின்பேரிலும், பால்வளத்துறை அதிகாரிகள் வழிக்காட்டுதலின்படியும், அரசு வழங்கி வரும் பல்வேறு சலுகைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பருவ மழையாலும் தற்போது நிலங்கள் பசுமையாக உள்ளன.

இதனால் தற்போது பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. சேலம் ஆவினில் தற்போது தினமும் 6.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு தரமான பால் உற்பத்தி, தீவனம் வழங்கும் முறை, நோய் தடுப்பு முறை உள்ளிட்டவை குறித்து திறன்மேம்பாட்டு பயிற்சி 50 நாட்களுக்கு 1500 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பால் உற்பத்தியாளர்கள் தங்களது வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ளலாம்,’’ என்றனர்.

The post பால் உற்பத்தி அதிகரிப்பு, நோய் தடுப்பு குறித்து ஆவினில் 1500 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: