தனி கோட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா

கிருஷ்ணகிரி, ஜூலை 25: சிப்காட்டுக்கு நிலம் வழங்க மறுத்து தனி கோட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நல்லகானகொத்தப்பள்ளியில் சிப்காட் 3 மற்றும் சிப்காட் 5 அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணி கடந்த 2016 முதல் நடந்து வருகிறது. அந்த நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.41 லட்சம் என மதிப்பிடப்பட்டு, கிணறு இருக்கும் பட்சத்தில் 100 சதவீத கூடுதல் தொகை மற்றும் 25 சதவீத ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதாக கூறி, நில எடுப்பு பணிக்காக தனி டி.ஆர்.ஓ., அலுவலகத்திலிருந்து விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தொடர்ந்து நேற்று காலை கருத்து கேட்பு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று நில எடுப்பு தனி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விவசாயிகள் திரண்டு வந்தனர். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்காமல் அலுவலகம் முன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கூறுகையில், நல்லகானகொத்தப்பள்ளியில் சிப்காட்டுக்கு நிலம் எடுக்கும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ள குண்டுகுறுக்கி, கோனேரிப்பள்ளி, குருபராதபள்ளியில் தென்பெண்ணையாற்றின் இடதுபுற கால்வாய் மூலம் விவசாயம் நடந்து வருகிறது. முப்போகம் விளையும் நிலத்தை சிப்காட்டிற்கு கொடுக்க மறுத்து 9 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

இருப்பினும் அரசு எங்கள் நிலங்களை எடுத்தே தீர வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது. சாலைக்கு இடம் கொடுத்தோம், பொதுப்பணித்துறைக்கு இடம் கொடுத்தோம். தொடர்ந்து அருகிலுள்ள விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு கேட்பது எவ்வகையில் நியாயம். போராட்டம் நடத்தும்போது அதிகாரிகள் சமரசம் பேசுகின்றனர். புதிய அதிகாரி வந்தவுடன் மீண்டும் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்புகின்றனர். பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒன்றாக அழைத்து பேச வேண்டும் என்றனர்.

தொடர்ந்து அவர்களிடம் நில எடுப்பு தனி கோட்டாட்சியர் பூங்கோதை மற்றும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

The post தனி கோட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: