நன்றி குங்குமம் தோழி
* அவியல் செய்யும் போது தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் இவற்றுடன் சிறிது ஊறவைத்த கசகசாவை சேர்த்து அரைத்தால் அவியல் திக்காகவும், சுவையாகவும் இருக்கும்.
* அவல் உப்புமா செய்யும் போது பயத்தம் பருப்பை பதமாக வேகவைத்து சேர்த்து கலந்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.
* கடையிலிருந்து வாங்கிய பனீரை அதிகபட்சம் 5 நாட்கள் வரைதான் உபயோகப்படுத்த வேண்டும். ஆனால், அதை பிளாஸ்டிக் டப்பாவில் தண்ணீரில் மூழ்கும் படி வைத்து, காற்று புகாமல் மூடி ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் அப்படியே ஃப்ரெஷ்ஷாக இருக்கும். தேவையான பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.- ஆர்.சாந்தா, சென்னை.
* உப்புமா செய்து இறக்கும் முன் கொஞ்சம் கெட்டித்தயிர் சேர்த்துக் கிளறினால் சுவை சூப்பராக இருக்கும்.
* சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது தேன் சேர்த்தால் இனிப்புகள் கூடுதல் ருசியாக இருக்கும்.
* ஆம்லெட் செய்யும் பொருட்களுடன் சிறிது தேங்காய் சேர்த்தால் ஆம்லெட் ருசிக்கும்.
* மோரில் மிளகு, சீரகத்தூள், உப்பு கலந்து அதை சப்பாத்தி மாவில் சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் ருசியுடன் மிருதுவாக இருக்கும்.- இந்திராணி தங்கவேல், சென்னை.
* வடாம் காயும் போது வடகத்திற்கு இடையில் காய்ந்த சிவப்பு மிளகாய்களை வைத்துவிட்டால் காக்காய் தொல்லையே வராது.
* 10 நிமிடங்கள் உப்பு கலந்த நீரில் ஊறிய பின் கிழங்குகளை வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.- சீனு சந்திரா, சென்னை.
* சர்க்கரை, வெல்லம் போன்றவைகளில் பாகு எடுக்கும் போது சிறிதளவு சுடு நீர் சேர்க்க, பாகு குறுகிப் போகாமல் நன்றாக இருக்கும்.
* முட்டைகளின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி வைத்தால் எளிதில் கெட்டுப் போகாது.
* முளைகட்டிய பச்சைப் பயிரை அரைத்து, கோதுமை மாவுடன் சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் மிகவும் சத்தாகவும், சுவையாகவும் இருக்கும்.- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
* வெந்தயத்தை வெறும் கடாயில் சூடாக வறுத்தெடுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொண்டால் சாம்பார், வெந்தயக் குழம்பில் முழு வெந்தயத்தை போடுவதற்கு பதில் பொடியை பயன்படுத்தலாம். வயிறு உபாதைக்கு பொடியை வாயில் போட்டுக் கொண்டு மோரை குடிக்கலாம்.
* தேங்காய் துவையலுக்கு வழக்கமான பொருட்களோடு ஒரு துண்டு இஞ்சியும், சிறிது கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் சுவை தூள் கிளப்பும்.- என்.பர்வதவர்த்தினி, சென்னை.
* காபி பில்டரை நெருப்பில் பழுக்க சூடு காட்டி பச்சைத் தண்ணீரில் உடனே போட்டு அலசி எடுத்து துடைத்து, காபி பொடியை போட்டு வெந்நீர் ஊற்றினால் பொடி இறங்காமல்
டிக்காஷன் மட்டும் ஒரு நிமிடத்தில் இறங்கிவிடும்.
* எந்த சிப்ஸ் செய்தாலும் காரம் பிசிறும் போது நெய்யில் காரத்தைக் கலந்து விட்டு பிசிறினால் சிப்ஸ் நெய்யில் பொரித்தது போல் வாசனையாகவும், காரம் உதிராமல் சமமாகக் கலந்திருக்கும்.
* கை மற்றும் கத்தியில் வெங்காய வாடை வீசினால் எலுமிச்சம் பழத்தை தேய்த்தால் வாடை போய்விடும். கே.கவிதா, வேலூர்.
* பிளாஸ்டிக் சாமான்களிலிருந்து வரும் ஒரு வித வாடையை போக்க அவைகளை ஒரு ஸ்பூன் உப்பு கலந்த தண்ணீரில் நன்றாக குலுக்கி கழுவ வேண்டும்.
* பெருஞ்சீரகத்தை சமையலில் சேர்த்தால் உணவில் சுவை அதிகரிக்கும். சாப்பிட்ட பின்பு இதனை வாயில் போட்டு மென்று சுவைத்தால் தனி மணமும், ருசியும் கிடைக்கும்.
*வாழைப்பூவை நறுக்கினால் கையில் கறை படியும். வினிகர் கலந்த நீரில் கையைக் கழுவினால் கறை போய்விடும்.
* முட்டை வேகவைக்கும் போது உப்பு போட்டு வைத்தால் மேல் தோல் எளிதில் உரிக்க வரும்.- கே.விஜயலட்சுமி, திருவண்ணாமலை.
* ரவா தோசை செய்யும் போது 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவைச் சேர்த்து தோசை செய்தால், தோசை நன்றாக சிவந்து மொறுமொறுவென்று வரும்.
* வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது அதோடு வறுத்த நிலக்கடலையை பொடி செய்து கொஞ்சம் கலந்து மாவு பிசைந்தால், வெங்காய பக்கோடா மொறுமொறுவென்று
அருமையாக இருக்கும்.
* சுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல் போன்ற வத்தல் குழம்பு செய்யும் போது, அதை அடுப்பிலிருந்து இறக்கியதும் கொஞ்சம் சுட்ட அப்பளத்தை நொறுக்கி போட்டு சாப்பிட்டால் வத்தல் குழம்பு சூப்பராக இருக்கும். – எல்.தீபிகா, சென்னை.
The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.
