நன்றி குங்குமம் தோழி
இயற்கை நமக்கு என்னற்ற பலன்களை தந்துள்ளது. இதில் இயற்கையாக தந்த காய்கனிகள், இதர உணவுப் பொருட்கள் ஏராளம். மனிதன் நாகரீகம் அடைந்ததும் இயற்கையாக கிடைத்த உணவை சமைத்து, சுவை கூட்டி உப்புக் காரம் சேர்த்து உண்ணத் தொடங்கினர். இதில் சில சிக்கல்களும் உண்டாயின. அந்த வகையில் சில உணவுப் பொருட்களை அப்படியே சமைக்காமல் உண்ணலாம். அதனால் உடல் நலம் பெறும். மனமும் மலரும்.
*முளைக்கட்டிய தானியங்களை உணவாகக் கொண்டால் சத்து அதிகரிக்கும். அதாவது, முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் பயறு வகைகளில் வைட்டமின் ‘பி’ மற்றும் ‘சி’ சத்து அதிகரிக்கப்படுகிறது. முடிந்த வரை இந்த முளைக்கட்டிய பயறு வகைகளை பச்சையாக சாப்பிடுவது நல்லது. உதாரணமாக முளைகட்டிய மூக்கடலை, பச்சைப்பயறு வகைகளை வெங்காயம், தக்காளி போன்றவற்றை வெட்டிப் போட்டு கொத்தமல்லி தழை, தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சிறிது எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடலாம்.
*வேர்க்கடலை, எள், தேங்காய், முந்திரிப் பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதால் கொழுப்புச் சத்து மற்றும் துத்தநாகம் கிடைத்து விடும்.
*கேரட், பீட்ரூட், தேங்காய், முள்ளங்கி, தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம், முட்டைக்கோஸ், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்களும், புதினா, கொத்தமல்லி போன்ற கீரைகளும், அத்துடன் அவல், வெல்லம், வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு போன்றவைகளும், இன்னும் பல வகையான இயற்கை உணவு வகைகளை அப்படியே உணவாகக் கொள்ளலாம்.
*இயற்கையான காய்கறிகள் வெயிலில் காயாமல் இருக்க வேண்டும். காய்ந்தோ, வாடினாலோ ‘கரோட்டின்’ சத்து வீணாகிவிடும்.
*முள்ளங்கியை துருவி கொஞ்சம் தயிர் கலந்து பச்சடியாக சாப்பிடலாம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இது போன்ற இயற்கை உணவுகளை சாப்பிடலாம். மேற்கண்ட வழிமுறைகளை கையாண்டு இயற்கை உணவு முறைகளை கடைபிடித்தால் உணவை சத்துமிக்கதாக்கலாமே!
தொகுப்பு: என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி.
The post வாசகர் பகுதி-இயற்கை உணவும், பயன்களும்! appeared first on Dinakaran.
