
விழுப்புரம்: அன்புமணி சுற்றுப் பயணத்துக்கு போலீஸ் தடை செய்ய வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. பரபரப்பான சூழலில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற தலைப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்தை தொடங்க உள்ளார். நாளை தொடங்கி நவம்பர் 1ம் தேதி வரை நடைபெறும் இந்த நடைபயணம் திருப்போரூரில் தொடங்கி தருமபுரியில் நிறைவடையவுள்ளது. இதனிடையே அன்புமணி சுற்றுப் பயணத்தின்போது பா.ம.க. பெயர், கொடியை பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் மனு அளித்தார்.
இந்நிலையில் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; சென்னையில் இருந்த பாமக தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மே மாதம் 30ம் தேதி முதல் பாமகவின் சென்னை அலுவலகம் தைலாபுரம் தோட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையிலோ, வேறு எங்கிலோ கட்சியின் தலைமையகத்தை வைத்திருப்பது சட்டவிரோதம்; பாமகவின் செயல்தலைவராக அன்புமணி தொடர்வார். தலைவர் என்று கூறிக் கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும். தாங்களாக நிர்வாகிகளை நியமனம் செய்து கொண்டு செயல்படுவது சட்டவிரோதமானது. கட்சி விதிகளை மீறுவோர் உடனடியாக நீக்கப்படுவார்கள்.
தேர்தல் ஆணையத்துக்கு புதிய பொறுப்பாளர்களின் பெயர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாமக பெயரையோ, கொடியையோ அன்புமணி பயன்படுத்தக் கூடாது என டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளோம். அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது என ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். நாளை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணியின் சுற்றுப் பயணத்துக்கு போலீஸ் தடை விதிக்க வேண்டும். அன்புமணி நாளை தொடங்கும் பயணத்தை போலீஸ் தடை செய்ய வேண்டும். அன்புமணி பயணத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புமணி தலைமையில் அணி என்பதே கிடையாது.
கட்சியும் நான்தான், தலைவரும் நான்தான். என்னிடம் அனுமதி வாங்காமல் அன்புமணி பயணம் செல்வதால்தான் அதனை தடை செய்ய வேண்டும். என் அனுமதி இன்றி பயணம் மேற்கொள்வதால்தான் தடை செய்ய கோரியுள்ளேன். எதிர்ப்பை மீறி அன்புமணி நடைபயணம் செய்தால் அதனை காவல்துறை பார்த்து கொள்ளும். ஒட்டுக் கேட்புக் கருவி இங்கிலாந்து அல்லது பெங்களூரில் வாங்கப்பட்டிருக்கலாம். எதற்காக ஒட்டுக்கேட்பு கருவி வைத்தார்கள் என எனக்கு தெரியும், அதை கூற விரும்பவில்லை. நான் அமர்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்பு கருவியை வைத்துள்ளனர் என்று கூறினார்.
The post அன்புமணி சுற்றுப் பயணத்துக்கு போலீஸ் தடை செய்ய வேண்டும்: ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.
