சமயபுரம், ஜூலை 24: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மூவராயன்பாளையம் பகுதியில் உள்ள நல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேம் அண்மையில் நடைபெற்றது. விழாவையொட்டி 48வது நாள் மண்டல பூஜையை முன்னிட்டு கிராம மக்கள் புனிதநீர் எடுப்பதற்காக முக்கொம்பு காவிரி ஆற்றிற்கு மேளதாளத்துடன் சென்றனர். ஆற்றில் இருந்து பக்தர்கள் குடங்களில் புனிதநீர் எடுத்துக்கொண்டு புறப்பட தயாராகினர்.
அப்போது சிலர் வாண வெடி வெடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்படி வெடிப்பதற்காக வானத்தை நோக்கி வீசப்பட்ட வெடி, கீழ் நோக்கி வந்து பூவரசன் – மனோகரி தம்பதி மகள் ஹனிக்கா என்ற இரண்டரை வயது சிறுமி மீது விழுந்து வெடித்து சிதறியது. இதில் சிறுமிக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறுமியை உடனே சிகிச்சைக்காக சிறுகாம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மண்ணச்சநல்லூர் அருகே வாணவெடி வெடித்து சிதறி 2 வயது சிறுமி பரிதாப சாவு appeared first on Dinakaran.
