மன்னார்குடி, ஜூலை 24: தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளி கல்வித்துறை இணைந்து 2024-25ம் கல்வியாண்டில் பள்ளி புத்தக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான புத்தாக்க போட்டிகள் அண்மையில் நடத்தப் பட்டன.
இந்த போட்டிகளில், மாநிலம் முழுவதும் இருந்து 46,246 குழுக்கள் பதிவு செய்ததில் 153 குழுக்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதிலிருந்து 45 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி 10 குழுக்களுக்கு (9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பிரிவுக்கு) முதல் பரிசு வழங்கப்பட்டது. இதில், திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நுண்ணோக்கி காட்சிகளை டிஜிட்டல் தளத்தில் பகிர்தல் மற்றும் பதிதல் குறித்த கண்டுபிடிப்பு முதல் பரிசை வென்றது. இதையடுத்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ”பள்ளி மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் 2025\” கண்காட்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பரவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இந்த நிலையில், மாநில அளவில் சிறப்பிடம் பெற்று பெருமை சேர்த்த பரவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் ஆகியோர் மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டையில் நடந்த அரசு விழாவில் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினர்.இது குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மாணவர்களிடம் கூறியதாவது;பிரச்சனைகளை அச்சமின்றி நோக்குங்கள். ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு சாத்தியமான கண்டுபிடிப்புக்கான வாய்ப்பாகும்.
நமது மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளி கொணர்வதே நமது அரசின் இலக்காகும். இந்த ஆண்டு பெற்ற வெற்றியை அடிப்படையாகக் கொண்டு அடுத்த ஆண்டு முழு மாவட்டத்தின் பங்கேற்புடன் மேலும் பெரிய சாதனைகளை படைக்க வேண்டும். மேலும், வரும் ஆண்டில் மாவட்டத்தின் அனைத்து பள்ளி மாணவர்களும் அவர் களின் புத்தாக்க சிந்தனை திறனை வளர்த்துக் கொள்ள இந்தப் பள்ளி புத்தக மேம்பாட்டு திட்டத்தினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
நுண்ணோக்கி காட்சிகளை டிஜிட்டல் தளத்தில் பகிர்தல் மற்றும் பதிதல் குறித்த கண்டுபிடிப்பின் பயன்கள் குறித்து பரவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூறியதாவது; மைக்ரோ ஸ்கோப் ஸ்டாண்ட் உதவியுடன் நுண்ணோக்கியின் மீது ஸ்மார்ட் போனை வைத்து முன்னோக்கி பெரிதுபடுத்தும் அளவைவிட பெரிய அளவிலான பிம்பங்களை காணலாம். மேலும், இதனை மடிக்கணினி வழியே ஒளிப்பட வீழ்ச்சிக்கு அனுப்பலாம்., இதனால் பல மாணவர்கள் ஒரே நேரத்தில் காணும்படி காட்சிப் படுத்தலாம். அசையும் நுண்ணுயிர்களை காணொளியாக பதிவு செய்து தேவையான நேரங்களில் மாணவர்களை பார்க்கச் செய்யலாம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post மாநில அளவிலான புத்தாக்க போட்டி பரவாக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் appeared first on Dinakaran.
