ஆதாரை காட்டி விவசாயிகள் இலவசமாக உரத்தை பெறலாம்

சேலம், ஜூலை 24: சேலம் மாநகரில் மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிரி உரம் தயாரிக்கப்படுகிறது. மையத்தில் விவசாயிகள் ஆதாரை காட்டி இலவசமாக உரத்தை பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் 5வது பெரிய நகரமாக இருப்பது சேலம் மாநகரம். சேலம் மாநகராட்சி 91.34 ச.கி.மீட்டர் பரப்பளவில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களை கொண்டுள்ளது. 60 வார்டுகள் உள்ளன. 10 லட்சம் மக்கள் தொகையை கொண்டுள்ளது. மாநகருக்கு வெளியூரில் இருந்து தினமும் 1 லட்சத்துக்கு மேல் மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு 550 டன் திடக்கழிவுகள் உருவாகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் குப்பையில்லா மாநகரமாக மாற்றும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக குப்பையில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிரி உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநகரில் 33 இடங்களில் உரம் தயாரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. தனியார் நிறுவனம் மூலம் மகளிர் குழுக்களை வைத்து 60 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பைகள், வீடு தோறும் வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

அதிலும் பொது மக்களிடம் இருந்து காய்கறி கழிவுகள், உணவு பொருட்கள் கழிவுகள் என மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் என பிரித்து பெறப்பட்டு வருகிறது. சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிரி உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மையமும் 2 டன் உரம் தயாரிக்கும் அளவில் உள்ளன. தற்போது 200 டன் உரம் இருப்பில் உள்ளன. இந்த உரம் இலவசமாக விவசாயிகள், மாடி தோட்டம் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்தை மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மாநகர பொறியாளர் செல்வநாயகம், செயற்பொறியாளர் திலகா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, தினமும் எவ்வளவு டன் மக்கும் குப்பை கொண்டு வரப்படுகிறது, எவ்வளவு டன் உரம் தயாரிக்கப்படுகிறது? என்பது குறித்த விவரங்களை அங்குள்ள பணியாளர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர், விவசாயிகளிடம் ஆதார் நகலை பெற்று கொண்டு உரத்தை இலவசமாக வழங்க வேண்டும்.

விவசாயிகள் குறைகேட்கும் கூட்டத்தின் போது விவசாயி களுக்கு இலவசமாக உரம் வழங்கப்படுவது குறித்து தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தோட்டக்கலை துறை மூலம் தேவைப்படும் விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறியதாவது:
சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளிலும் வீடுதோறும் வாகனம் மூலம் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. மக்கும், மக்காத குப்பை என பிரித்து பெறப்படுகிறது. மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிரி உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. குப்பையில் உரம் தயாரிப்பை அதிகப்படுத்தும் வகையில், ஒவ்வொரு வார்டுக்கு நுண்ணுயிரி உரம் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் நுண்ணுயிரி உரம், காய்கறி, உணவு பொருட்கள் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது இயற்கையான உரமாக கிடைக்கிறது. தயாரிக்கப்படும் உரம் இலவசமாக விவசாயிகளுக்கும், மாடி தோட்டம் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் நுண்ணுயிரி உரத்தை அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர். உரம் தேவைப்படும் விவசாயிகள், தங்களது ஆதார் நகலுடன் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மைய அலுவலர்களிடம் சென்று விண்ணப்பித்தால் போதும். தேவையான உரத்தை பெற்று கொள்ளலாம். மாடி தோட்டம் வைத்துள்ளவர்களும் அதற்கான ஆவணங்களை வைத்து விண்ணப்பித்தால் உரத்தை பெறலாம். தற்போது மையத்தில் 200 டன் உரம் ைகயிருப்பில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஆதாரை காட்டி விவசாயிகள் இலவசமாக உரத்தை பெறலாம் appeared first on Dinakaran.

Related Stories: