- வட மாநிலம்
- சேலம்
- இர்பன்சாரி
- சமன்பூர் போர்வா கிராமம், தம்தாரா மாவட்டம், ஜார்கண்ட் மாநிலம்
- தன்பாத் ரயில்வே
- வடக்கு
- தின மலர்
பள்ளிபாளையம்: வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜார்கண்ட் மாநிலம் தம்தாரா மாவட்டம், சமன்பூர் போர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் இர்பான்அன்சாரி (20). கூலி தொழிலாளியான இவர், வேலை தேடி கடந்த 20ம் தேதி, தன்பாத் ரயில் நிலையத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு புறப்பட்டுள்ளார். அவருடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களான ஜாசிம்அன்சாரி (18), அர்பாஜ் அன்சாரி (18), இர்சாத் அன்சாரி(18), கிஷ்மத் அன்சாரி (30) மற்றும் உல்பத்அன்சாரி (20) ஆகியோரும் வந்துள்ளனர். மறுநாள் (21ம் தேதி), சேலம் ரயில் நிலையத்தில் வந்து 6 பேரும் இறங்கியுள்ளனர்.
அப்போது, அவர்களிடம் தமிழ் மற்றும் இந்தி பேசியவாறு செயற்கை கால் பொருத்தியவர் உள்பட 5 பேர், நைசாக பேச்சு கொடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படையில் உள்ள நூற்பாலையில் வேலை உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், தங்குமிடம் கொடுத்து, மூன்று வேளை உணவுடன், 8 மணி நேர வேலைக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக கூறி அழைத்துள்ளனர்.
நல்ல சம்பளத்தில், உணவு மற்றும் தங்குமிடத்துடன் வேலை கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்த தொழிலாளர்கள் 6 பேரையும் 2 கார்களில் ஏற்றிக்கொண்டு வந்த அந்த நபர்கள், வெப்படை உப்புபாளையம் நவக்காட்டில் ஒரு ஓட்டு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். தொடர்ந்து, அவர்களின் குடும்பத்தினருடன் செல்போனில் பேச வைத்து, 1.25 லட்சம் ரூபாய் ஆன்லைன் அக்கவுண்ட்டில் போட வைத்துள்ளனர். பின்னர், அந்த தொழிலாளர்களிடம் இருந்த செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள், பின் நம்பர் ஆகியவற்றை கேட்டு பறித்துக்கொண்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவர்களை இறக்கி விட்டு, கார்களில் தப்பி சென்று விட்டனர்.
இதையடுத்து, வெப்படை காவல் நிலையத்தை தேடி கண்டுபிடித்து வந்த ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் 6 பேர், கும்பல் தங்களை தாக்கி செல்போன்கள், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்துச்சென்று விட்டதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டார். இதில், ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்தது வெப்படை அருகில் உள்ள ஆனங்கூர் அண்ணா நகரைச் சேர்ந்த சக்திவேல்(21) மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், கூட்டாளிகளான தருண்குமார்(21), மோடமங்கலம் நவீன்குமார்(20) மற்றும் சரத்(21) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post சேலத்திற்கு வேலை தேடி வந்த வடமாநில தொழிலாளர் 6 பேரை கடத்தி ரூ.1.25 லட்சம் பறிப்பு: பள்ளிபாளையத்தில் 4 பேர் கும்பல் கைது appeared first on Dinakaran.
