சென்னை: போதைப்பொருள் சப்ளையர் பிரதீப்குமார் அளித்த வாக்குமூலத்தின் படி, கொக்கைன் வாங்கி பயன்படுத்திய நடிகை, நடிகர்களை கைது செய்யாமல் இருக்க ரூ.50 லட்சம் வரை லஞ்சம் வாங்கிய தனிப்படை இன்ஸ்ெபக்டர், 2 எஸ்ஐக்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார் ஒன்றில் கடந்த மே 22ம் தேதி இரவு நடந்த மோதல் தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் இசிஆர் ராஜா, அதிமுக நிர்வாகி அஜய்வாண்டையார், முன்னாள் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி பிரசாத், ரவுடி சுனாமி சேதுபதி என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோதலுக்கு காரணமான முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத்திடம் போலீசார் விசாரணை நடத்திய போது, சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் (எ) பிரடோ (38) என்பவரிடம் இருந்து அதிகளவில் கொக்கைன் என்ற போதைப் பொருள் வாங்கி நடிகர் காந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு கொடுத்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து கொக்கைன் விற்பனை செய்த பிரதீப்குமார் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா கானா நாட்டைச் சேர்ந்த ஜான் (38) என்பவரை தனிப்படையினர் கடந்த ஜூன் 17ம் தேதி கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி கொக்கைன் போதைப்பொருள் வாங்கிய நடிகர்கள் காந்த், கிருஷ்ணா ஆகியோரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த வழக்கில் சினிமா பிரபலங்களுக்கு தொடர்பு இருந்ததால், அவர்களை பிடித்து விசாரணை நடத்தும் வகையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையில் திருவலிக்கேணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் 2 எஸ்ஐக்கள் இருந்தனர்.
பின்னர் போதைப்பொருள் வழக்கில் 2வது முறையாக முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்தை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது பிரசாத் அளித்த வாக்குமூலத்தின்படி சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருள் விற்பனை ெசய்ததாக நைஜீரியா நாட்டை சேர்ந்த சாரா கொமாமா உள்பட மொத்தம் 26 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், கொக்கைன் சப்ளையர் பிரதீப்குமார் மற்றும் நைஜீரியா நாட்டை சேர்ந்த சாரா கொமாமாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், கொக்கைன் சப்ளையர் பிரதீப்குமார் மூலம் நடிகர் காந்தும், விருகம்பாக்கத்தை சேர்ந்த ஜெஸ்வீர் என்ற கெவின் என்பவர் மூலம் நடிகர் கிருஷ்ணா ஆகியோர் கொக்கைன் ரெகுலராக வாங்கி வந்தனர் என்றும், இந்த 2 நடிகர்கள் பரிந்துரைப்படியே நாங்கள் முன்னணி நடிகைகளுக்கு நேரடியாக கொக்கைன் கொடுத்து வந்ததாக வாக்குமூலம் அளித்தனர். நடிகைகளுக்கு தனியாக கொக்கைன் சப்ளை செய்ய பிரதீப்குமார் தனது தொழில் பார்ட்னரான நைஜீரியா நாட்டை சேர்ந்த சாரா கொமாமாவை நியமித்து இருந்ததாக பிரதீப்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் பிரதீப்குமார் மற்றும் நைஜீரியா நாட்டை சேர்ந்த சாரா கொமாமா அளித்த வாக்குமூலத்தின்படி கொக்கைன் வாங்கிய நடிகைகள் மற்றும் நடிகர்களின் பட்டியலை ைவத்து ரகசிய விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது, முன்னணி நடிகைகள் சிலரை தொடர்பு கொண்டு கொக்கைன் பயன்படுத்தியது தொடர்பாக தனிப்படையினர் அணுகியுள்ளனர். அப்போது சில நடிகைகள் நாங்கள் விசாரணைக்கு வந்தால், ‘எங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்’. இதனால் எங்களை வழக்கில் தொடர்பு படுத்தாமல் இருக்க பணம் கொடுப்பதாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் தனிப்படையில் பணியாற்றும் போலீசாருக்கும், நடிகைகள் சிலருக்கும் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்காக பிரதீப்குமார் மற்றும் சாரா கொமாமாவிடம் கொக்கைன் வாங்கிய நடிகைகள் மற்றும் நடிகர்கள் சிலர் ரூ.50 லட்சம் வரை தனிப்படையில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் மற்றும் 2 எஸ்ஐக்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து போதைப்பொருள் வழக்கில், சில நபர்களை மட்டும் தனிப்படையினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் கொக்கைன் வாங்கி பயன்படுத்திய நடிகைகளிடம் அவர்கள் விசாரணை நடத்தாமல் வழக்கை முடிக்க முயற்சி செய்துள்ளனர். கொக்கைன் சப்ளையர் பிரதீப்குமார் மற்றும் நைஜீரியா பெண் அளித்த வாக்குமூலத்தில் நடிகைகளை அவர்கள் பெயருடன் எத்தனை முறை போதைப்பொருள் வாங்கினார்கள் என்ற விவரங்களுடன் அளித்திருந்தும் ஏன் தனிப்படையில் உள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்த வில்லை என்று உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அப்போதுதான் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 எஸ்ஐக்கள் விசாரணை நடத்தாமல் இருக்கவும், வழக்கில் இருந்து விடுவிக்கவும் ரூ.50 லட்சம் வரை பணம் பெற்றது உயர் அதிகாரிகள் கவனத்திற்கு வந்தது.
இதுதொடர்பாக உயர் காவல்துறை அதிகாரிகள் உத்தரவுப்படி நடிகைகளிடம் ரூ.50 லட்சம் வரை பணம் பெற்றது தொடர்பாக துணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 எஸ்ஐக்கள் பணம் பெற்றது உறுதியானது. அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மற்றும் 2 எஸ்ஐக்களை அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க பணம் கொடுத்த நடிகை, நடிகர்கள் யார் யார் என்பது குறித்து துணை கமிஷனர் தனியாக விசாரணை நடத்தி வருகிறார். அந்த விசாரணையில் நடிகை, நடிகர்கள் போதைப்பொருள் வழக்கில் இருந்து தப்பிக்க பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டால், சம்பந்தப்பட்ட 3 காவல் அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொக்கைன் பயன்படுத்திய வழக்கில் நடிகைகள் மற்றும் நடிகர்களிடம் விசாரணை நடத்தவும், அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கவும், தனிப்படையில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் மற்றும் 2 எஸ்ஐக்கள் ரூ.50 லட்சம் வரை பணம் வாங்கிய விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post போதைப்பொருள் சப்ளையர் பிரதீப்குமாரிடம் கொக்கைன் வாங்கிய நடிகைகளை கைது செய்யாமல் இருக்க ரூ.50 லட்சம் லஞ்சம்: தனிப்படை இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐக்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.
