பெரம்பலூர், ஜூலை 22: பெரம்பலூரில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவனின் உயர் கல்விக்கு உதவிய பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ். பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நெகழ்ச்சி சம்பவம். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்றுபொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், நெய்க்குப்பை கிராமத்தில் வசிக்கும் ராஜகுமாரி என்பவரின் மகன் சஞ்சய் என்பவர் கடந்த 14ம் தேதி நடந்த பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தனது உயர் கல்விக்கு உதவி கோரி மாவட்டக் கலெக்டரிடம் கோரிக்கை மனுவைக்கொடுத்தார். கண் பார்வையற்ற சூழலிலும் உயர்கல்வி பயிலவேண்டும் என்ற மாணவன் சஞ்சயின் ஆர்வைத்தைப் பாராட்டிய கலெக்டர் அருண்ராஜ், உயர் கல்விக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார்.
அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சஞ்சய்க்கு ரோவர் கல்லூரியில் உயர் கல்வி பயில்வதற்காக இலவசமாக இடம் பெற்றுத்தந்து அதற்கான ஆணையினை கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். மன நெகிழ் வோடு அந்த ஆணையினைப் பெற்றுக் கொண்ட கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவன் சஞ்சய் கண்ணீர்மல்க கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், எனது உடன்பிறந்த சகோதரன் மற்றும் சகோதரி என நாங்கள் மூவரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். இந் நிலையில் எனது உயர் கல்விக்கு உதவிட வேண்டுமென்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்த ஒரே வாரத்தில் எனக்கு இலவசமாக தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங் கலை பட்டப்படிப்பு தமிழ் பாடப்பிரிவில் படிப்பதற்கு இடம் பெற்று தந்தார். தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ, 1000 வழங்குவதும் என்னை போன்ற ஏழை எளிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனது உயர் கல்விக்கனவை நிறைவேற்றிய கலெக்டருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி உயர் கல்விக்கு உதவிய கலெக்டர் appeared first on Dinakaran.
